`சரணாலய ஏரியை தயவு செஞ்சு தூர்வாருங்க!’ - திருவாரூர் மக்கள் கோரிக்கை | sanctuary lake is not properly maintain, People urges government to take care

வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (20/02/2019)

கடைசி தொடர்பு:21:25 (20/02/2019)

`சரணாலய ஏரியை தயவு செஞ்சு தூர்வாருங்க!’ - திருவாரூர் மக்கள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ளது, வடுவூர். இங்கு 316 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி ஒன்று உள்ளது. கடந்த 1999 - ம் ஆண்டு இந்த ஏரி மற்றும் அதன் வனப்பகுதியான 316 ஏக்கர் நிலப்பரப்பும் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று வரை தமிழக அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த ஏரி நீரின் மூலமாகச் சுற்றுவட்டாரப் பகுதிகளான சாத்தனூர், அடிச்சேரி, புதுக்கோட்டை, வடபாதி, தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றது.

சரணாலய ஏரி

சரணாலயப் பறவைகள் படங்களைக் காண இங்கு க்ளிக் செய்யவும்!

இந்த வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து தங்குவது வழக்கமாகும். அதை இவ்வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதி மக்களும் கண்டு மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்தாண்டு இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலிருந்து நத்தக் கொத்தி நாரை, நீர்க் காகம், அரிவாள் மூக்கன், வண்ண நாரை, கூழைக்கடா, கரண்டி வாயன், புள்ளி மூக்கு வாத்து உள்ளிட்ட 140 இனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் இங்கு முகாமிட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிடக் குறைவு என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 கடந்த ஆண்டு 196 பறவை இனங்கள் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்த நிலையில் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 50 இனங்கள்கூட இங்கு வரவில்லை. கஜா புயல் காரணமாக காலச்சூழல் மாற்றம் ஏற்பட்டு இனப்பெருக்கக் காலம் மாறிவிட்டதே இதற்குக் காரணம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், ``இந்த ஏரியை அரசு பராமரித்து படகு சவாரிகள் ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல இந்த ஏரி தூர்வாரி பல ஆண்டுகள் கடந்துவிட்டதால் ஏரியை வருகின்ற கோடைக்காலத்தில் தூர்வாரி அதிகளவு நீரைச் சேமிக்க வேண்டும். அதனால் இன்னும் அதிகளவிலான பறவைகள் வரும். இந்தப் பகுதி மக்களின் தண்ணீர் தேவைக்கும் பயன்படும்" என்கின்றனர்.

 


[X] Close

[X] Close