எடப்பாடி பழனிசாமிக்கு தைலாபுரத்தில் விருந்து! | EPS to visit Ramadoss'' house for lunch

வெளியிடப்பட்ட நேரம்: 20:17 (20/02/2019)

கடைசி தொடர்பு:20:52 (20/02/2019)

 எடப்பாடி பழனிசாமிக்கு தைலாபுரத்தில் விருந்து!

நாடாளுமன்றக் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தினமே, தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ராமதாஸுக்குத் தேநீர் விருந்து அளித்து அசத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் தேநீர் குடித்து முடித்துக் கிளம்பிய ராமதாஸ், தனது வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். நாளை, தைலாபுரம் தோட்டத்தில் முதல்வருக்கு மதிய விருந்து அளிப்பதற்கு உற்சாகமாகத் தயாராகி வருகிறது ராமதாஸ் குடும்பம்.

ராமதாஸ் - எடப்பாடி பழனிசாமி

பழைய கசப்புகளை மறந்து கடந்த 19 ம் தேதி அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கரங்கள் கோத்தன. பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளோடு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும் அ.தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்பட்டது. கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வருகை தந்த ராமதாஸை இருகரம் பிடித்து வரவேற்ற எடப்பாடி, மூச்சுக்கு முந்நூறு தடவை அவரை `ஐயா' என்றே அழைத்தார். அந்தக் கணமே எடப்பாடியை ராமதாஸுக்குப் பிடித்துப் போய்விட்டதாம். ராமதாஸ் அமரச் சொன்ன பிறகும், பா.ம.க. தலைவர் கோ.க.மணிக்கு இருக்கை வந்த பின்னரே எடப்பாடி பழனிசாமி அமர்ந்ததும், ``இப்ப இருக்கும் அரசியல் தலைவர்களில் நீங்கள் மூத்தவர். உங்க ஆலோசனை எங்களுக்கு எப்பவும் வேண்டும்." என்று எடப்பாடியார் பவ்யம் காட்டியதும், ராமதாஸைக் குளிர்வித்துவிட்டது.

கூட்டணி அறிவிப்பு

கூட்டணி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அன்று மாலையே, தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ராமதாஸ், அன்புமணி உட்பட பா.ம.க. தலைவர்களுக்குத் தேநீர் விருந்து அளித்து எடப்பாடி உபசரித்தார். அச்சமயம், ``நீங்க கண்டிப்பா தைலாபுரம் தோட்டத்துக்கு விருந்துக்கு வரணும்.'' என்று ராமதாஸ் அழைப்பு விடுக்க, ``அதுக்கென்ன, நிச்சயமா வந்துடுறோம்.'' என்று முதல்வரும் சம்மதித்துள்ளார். தற்போது விருந்துக்கான ஏற்பாடுகள் தைலாபுரத்தில் மும்முரமாகியுள்ளன. வரும் பிப்ரவரி 22ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்தளிக்க ஏற்பாடாகியுள்ளது. துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோரும் விருந்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

 


[X] Close

[X] Close