சீர்மரபினரை சீர்படுத்தப்பட்ட பழங்குடியினராக மாற்ற கோரிக்கை! - அரசின் ஆய்வுக் கூட்டம் | Review meeting has conducted for DNC community to change in to DNT

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (20/02/2019)

கடைசி தொடர்பு:23:00 (20/02/2019)

சீர்மரபினரை சீர்படுத்தப்பட்ட பழங்குடியினராக மாற்ற கோரிக்கை! - அரசின் ஆய்வுக் கூட்டம்

சீர்மரபினரைச் சீர்படுத்தப்பட்ட பழங்குடியினராக மாற்றம் செய்வது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா தலைமையிலான குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பான அறிக்கை இந்த மாத இறுதிக்குள் அரசுக்கு அளிக்கப்படும் என ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர். 

ஆய்வுக் கூட்டம்

ஆங்கிலேய ஆட்சிக் காலத்துக்கு முன்பு சீர்படுத்தப்பட்ட பழங்குடியினர் (டி.என்.டி) என மறவர் சமூகத்தினர் இருந்துள்ளனர். அவர்களைக் குற்றப்பரம்பரையாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. அதனால் அவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்தனர். அருகில் உள்ள காவல்நிலையங்களில் கையொப்பமிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டனர். நாட்டின் விடுதலைப் போரில் இவர்களின் பங்களிப்பு கணிசமானதாக இருந்ததால் ஆங்கிலேயர்களால் இத்தகைய நெருக்கடி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டின் விடுதலைக்குப் பின்னர் அந்தச் சமுதாயத்தினர் சீர்மரபினராக (டி.என்.சி) அறிவிக்கப்பட்டனர். அதனால் அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எனவே, இந்தச் சமூகத்தினர் கிராமப் பகுதிகளில் போதிய முன்னேற்றம் இல்லாமல் பின்தங்கிய நிலையில் வாழும் நிலை ஏற்பட்டது. எனவே, தங்களைச் சீர்படுத்தப்பட்ட பழங்குடியினராக அறிவிக்கக்கோரி அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். 

கடந்த 70 ஆண்டுக்காலமாக இந்தக் கோரிக்கையை அவர்கள் விடுத்துவந்த நிலையில், இது பற்றி ஆய்வு செய்ய வருவாய்த்துறை முதன்மைச் செயலாளரான அதுல்யா மிஸ்ரா தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்தது. அந்தக் குழுவில் அதுல்யா மிஸ்ராவுடன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் மதிவாணன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் சம்பத், வருவாய்த்துறை இணை ஆணையர் லட்சுமி ஆகியோர் கொண்ட இந்தக் குழுவினர், மறவர் சமுதாயத்தினர் வாழும் பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். 

ஆய்வுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்

மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டங்களை நடத்திய இக்குழுவினர் இன்று நெல்லை மாவட்டம் வருகை தந்தனர். மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்ற இக்குழுவினர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில், சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்கள், சமுதாயத் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களைச் சீர்படுத்தப்பட்ட பழங்குடியினராக மாற்ற வேண்டும் என்பதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை முதன்மைச் செயலாளரான அதுல்யா மிஸ்ரா, ``சீர்மரபினரை, சீர்படுத்தப்பட்ட பழங்குடியினராக மாற்றுவது தொடர்பாக அந்த மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகிறோம், இதுவரை 9 மாவட்டங்களில் ஆய்வு செய்து மக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளோம். அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு கொள்கைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் டி.என்.டி எனப்படும் சீர்படுத்தப்பட்ட பழங்குடியினராக மாற்றுவது குறித்து ஆய்வு செய்து எங்கள் பரிந்துரைகளை அளிப்போம். இந்த மாத இறுதிக்குள் அரசுக்கு அறிக்கை அளிப்போம்’’ எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், வருவாய்த்துறை அலுவலர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  


[X] Close

[X] Close