`அது மக்கள் நலக் கூட்டணி இல்லை; பண நலக் கூட்டணி!’ - ஸ்டாலின் | DMK chief Stalin slams ADMK alliance

வெளியிடப்பட்ட நேரம்: 21:32 (20/02/2019)

கடைசி தொடர்பு:21:32 (20/02/2019)

`அது மக்கள் நலக் கூட்டணி இல்லை; பண நலக் கூட்டணி!’ - ஸ்டாலின்

அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி மக்கள் நலக் கூட்டணி அல்ல; பண நலக் கூட்டணி என மக்கள் விமர்சித்து வருவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். 

ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் ஆலோசித்த பின்னர், புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவித்தனர். எந்தெந்தத் தொகுதிகள் பங்கீடு குறித்து குழு அமைக்கப்பட்டு, பின்னர் அறிவிக்கப்படும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். தேர்தல் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையொப்பமானது.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், `காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுச்சேரி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று தொகுதிகள் எண்ணிக்கை மட்டும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தொகுதிகள் குறித்து குழு அமைத்து தோழமைக் கட்சிகளுடன் ஆலோசித்த பின்னர் அறிவிக்கப்படும். அந்தப் பணி நாளையிலிருந்து தொடங்குகிறது. ஓட்டலில் ரகசியமாகச் சந்தித்து கூட்டணி குறித்துப் பேசாமல், எங்கள் கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கூடி கூட்டணி குறித்து ஆலோசித்து உங்கள் மத்தியில் அறிவித்திருக்கிறோம்’ என்றார்.

ஸ்டாலின்

`எந்தெந்தக் கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன’ என்ற கேள்விக்குப் பதிலளித்த ஸ்டாலின், ``ஏற்கெனவே எங்களுடன் தோழமை கொண்டிருக்கிற, கடந்த 2 ஆண்டுக்காலமாக அரசை எதிர்த்து நடத்திய போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று தோழமை கொண்டிருந்தனவோ அந்தக் கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம்’ என்றார். அ.தி.மு.க - பா.ம.க கூட்டணியை பண நலக் கூட்டணி என மக்கள் விமர்சனம் செய்வதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். 
 


[X] Close

[X] Close