`டிஜிட்டல் இந்தியாவில் 4 நாள்களாகியும் ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை!’ - முகிலன் மீட்பு கூட்டியக்கம் | Government should take appropriate action to find Mukilan, urges Activists

வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (20/02/2019)

கடைசி தொடர்பு:11:10 (21/02/2019)

`டிஜிட்டல் இந்தியாவில் 4 நாள்களாகியும் ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை!’ - முகிலன் மீட்பு கூட்டியக்கம்

``டிஜிட்டல் இந்தியாவில் நான்கு நாள்கள் ஆகியும் காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது டிஜிட்டல் இந்தியாவிற்கே கேவலம். முகிலனை காவல்துறையினர் கண்டுபிடிக்காவிட்டால் மக்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்” எனத் தோழர் முகிலன் மீட்புக் கூட்டியக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பல அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து தோழர் முகிலன் மீட்புக் கூட்டியக்கம் என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளனர். இந்தக் கூட்டியக்கத்தினர் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ``தோழர் முகிலன் கூடங்குளம், கதிராமங்கலம், ஜல்லிக்கட்டு,  தாதுமணல், ஸ்டெர்லைட், மணல் கொள்ளை உட்பட பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் வழக்கு, கைது, சிறை என அரசின் பல அடக்குமுறைகளைச் சந்தித்து வருகிறார். மணல் மாஃபியாக்களால் தாக்குதலுக்கும் ஆளாகி உள்ளார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு `திட்டமிட்ட சதி’ என்ற அடிப்படையில் தமிழக அரசு, காவல்துறை, ஸ்டெர்லைட் மற்றும் ஸ்டெர்லைட் கூலிப்படையினரை காணொலி மூலம் தொடர்ந்து மக்கள் முன்பு பத்திரிகை, தொலைக்காட்சி மூலம் அம்பலப்படுத்தி வருகிறார்.

சென்னையில் கடந்த 15-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ``கொளுத்தியது யார்?” என்ற தலைப்பில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ வைப்புச் சம்பவத்தில் ஈடுபட்டது ஸ்டெர்லைட் ஆலையின் கூலிப்படைதான் என ஆதாரங்களுடன் வெளியிட்டார் முகிலன். அதில் தொடர்புடைய பல அதிகாரிகளைக் குறிப்பிட்டுப் பேசினார். அதில், குறிப்பாக அச்சம்பவத்தின் போது பணியில் இருந்த தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சரத்கர் ஆகியோர் அனில் அகர்வாலோடு கைகோத்து இயங்கி இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின் போதே, தன் உயிருக்குப் பாதுகாப்பில்லை. தனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்ற அச்சத்தையும் தெளிவாகக் கூறியிருந்தார். செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு இரவு சுமார் 11 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்குச் சென்றவரை காணவில்லை. அவரது செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தற்போது முகிலன் உயிரோடு இருக்கிறாரா அல்லது கடத்தப்பட்டாரா, யாரால் கடத்தப்பட்டார் எனத் தற்போதுவரை தெரியவில்லை.

டிஜிட்டல் இந்தியா என்கிறார்கள். டிஜிட்டல் இந்தியாவில் நான்கு நாள்கள் ஆகியும் காணாமல் போன ஒருவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது டிஜிட்டல் இந்தியாவிற்கே கேவலம். இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் அரசமைப்புச் சட்டம் பிரிவு 51(A),(9)-ன் படி இயற்கை வளங்களைப் பாதுகாக்க கடமைப்பட்டவர்கள் ஆவர். அந்தக் கடமைக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்து மக்கள் பணியாற்றி வரும் முகிலனுக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண எவரொருவர் இயற்கையைப் பாதுகாக்க முன்வருவார் அரசோ, காவல்துறையோ இதுபோன்ற செயற்பாட்டாளார்களை ஒடுக்க முடியாது.

தோழர் முகிலனை உடனடியாகக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். முகிலன் கடத்தலின் போது என்ன நடந்தது, அந்தக் கொடூரத்தை நடத்திய குற்றவாளிகள் யார் யார் என்பது குறித்தும் தெளிவான உண்மையான அறிக்கையை வரும் 22-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கையை முன் வைக்கிறோம். முகிலன் விசயத்தில் அரசும் காவல்துறையும் மெத்தனப் போக்காக இருக்கக் கூடாது.  தவறினால், அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மக்களைத்  திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.” என்றனர்.   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close