`பா.ம.க-வோடு கூட்டணி அமைத்ததில் என்ன தவறு?’ - ஆர்.பி.உதயகுமார் கேள்வி! | minister r.b.uthayakumar speak about pmk alliance

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (21/02/2019)

கடைசி தொடர்பு:10:48 (21/02/2019)

`பா.ம.க-வோடு கூட்டணி அமைத்ததில் என்ன தவறு?’ - ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

``கலைஞரைக் கொலை செய்ய முயற்சி செய்தார் என்று தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட வைகோவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு தி.மு.க கூட்டணி அமைக்கும்போது, மக்கள் நலனுக்காக நாங்கள் பா.ம.க-வோடு சேர்ந்ததில் என்ன தவறு’’ என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோவையில் தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

கோவை மண்டல அ.தி.மு.க அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று கோவையில் நடைபெற்றது. இதில் கோவை திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த அம்மா பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர்  பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ``அ.தி.மு.க கூட்டணி அறிவிப்பு தமிழக மக்களின் நம்பிக்கையையும்; தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. கூட்டணி அறிவிப்பைப் பார்த்துவிட்டு, டி.டி.வி.தினகரன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அங்கு தேர்தலில் நிற்பதற்கே ஆட்கள் இல்லை என்று தகவல் வருகிறது. தி.மு.க-வும் தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு இருக்கின்றனர். கூட்டணியை ஒருங்கிணைத்து அறிவிக்க முடியாமல் இருக்கின்றனர். தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி இந்தக் கூட்டணி அமைத்து 40 தொகுதியும் நமதே என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கின்றோம். என்றவரிடம்...

ஜெயலலிதா மணிமண்டபத்தை எதிர்க்கும்  பா.ம.க ராமதாஸோடு எப்படிக் கூட்டணி? என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ….

``கொள்கை அளவிலே மக்கள் நலன் சார்ந்து நாணலாக விட்டுக்கொடுத்து இருக்கிறோம் என்று பா.ம.க தலைவர் ராமதாஸ் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதை நாங்கள் வழிமொழிகிறோம். இந்த முடிவை ஒட்டுமொத்த தமிழகமும் வரவேற்கின்றனர். கலைஞரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகப் பழியைச் சுமத்தி வைகோவை தி.மு.க-விலிருந்து வெளியேற்றினார்கள். அதற்காக 9 பேர் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டனர். தி.மு.க-வை எதிர்த்துத் தனி இயக்கமே தொடங்கினார் வைகோ. அப்படிப்பட்டவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு தி.மு.க கூட்டணி அமைக்கும்போது, நாங்கள் பா.ம.க-வோடு கூட்டணி வைப்பதில் என்ன தவறு?

தே.மு.தி.க-வுடன் கூட்டணி இழுபறியில் இருக்கின்றதே என்ற கேள்விக்கு...

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் எதுவும் தெரிவிக்காமல் நழுவிச் சென்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close