விருத்தாசலத்தில் மாசி மகத் திருவிழாவில் விடிய விடிய நடந்த தெப்பத் திருவிழா! | Masi magam festival held in Vridhachalam

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (21/02/2019)

கடைசி தொடர்பு:11:00 (21/02/2019)

விருத்தாசலத்தில் மாசி மகத் திருவிழாவில் விடிய விடிய நடந்த தெப்பத் திருவிழா!

கோயிலில் மாசி மகத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் 12 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தக் கோயிலில் பிராகாரம், கொடிமரம், தீர்த்தம், கோபுரம், நந்தி என அனைத்தும் ஐந்து, ஐந்தாக இருப்பது சிறப்பாகும். இந்த ஆண்டு மாசி மகத் திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மகத் திருவிழாவில் நேற்று இரவு விடிய விடிய தெப்பத் திருவிழா  நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தெப்பத்தில் பவனி வந்த இறைவனை தரிசித்து வழிபட்டனர்.

விருத்தகிரீஸ்வரர்

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் `காசியை விட வீசம்  அதிகம் விருத்தகாசி' என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் மாசி மகத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் 12 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்தக் கோயிலில் பிராகாரம், கொடிமரம், தீர்த்தம், கோபுரம், நந்தி என அனைத்தும் ஐந்து, ஐந்தாக இருப்பது சிறப்பாகும். இந்த ஆண்டு மாசி மகத் திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் பின்பு தினமும்  பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா  நடந்தது. 

ஒன்பதாம் நாள் திருவிழாவாக கடந்த 18-ம் தேதி தேர்த்திருவிழா நடந்தது. விழாவில் பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வர் ஆகிய உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு பக்தர்கள் வடம் பிடித்து தேர்த் திருவிழா நடந்தது. பத்தாம் நாள் திருவிழாவாக நேற்று முன் தினம் மாசி மக உற்சவத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனத்தில் வீதியுலா வந்து மணிமுத்தாற்றில் தீர்த்தவாரி நடந்தது. பதினோராம் நாள் திருவிழாவாக இரவு புதுப்பேட்டை அம்மன் குளத்தில் வள்ளி சமேத முருகப் பெருமான் தெப்பத் திருவிழா நடந்தது. 

தெப்பத் திருவிழா

முன்னதாக விருத்தகிரீஸ்வரர் கோயிலில் முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, புஷ்ப வாகனத்தில்
சாமி வீதியுலா நடந்தது. பின்னர் அதிகாலை அம்மன் குளத்தில் தெப்பத் திருவிழா நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி மூன்று முறை வலம் வந்ததைக் குளத்தைச் சுற்றி நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர். 


[X] Close

[X] Close