நள்ளிரவில் தமிழக மீனவர்கள்மீது கொடூரத் தாக்குதல்! - தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் | 13 tamilnadu fishermen arrested by Sri Lankan Navy

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (21/02/2019)

கடைசி தொடர்பு:11:40 (21/02/2019)

நள்ளிரவில் தமிழக மீனவர்கள்மீது கொடூரத் தாக்குதல்! - தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 13 பேரையும் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி சிறைப்பிடித்துச் சென்றுள்ள சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிப்பு.

ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளிலிருந்து நேற்று காலை 1200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக  படகுகளைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட படகில் இருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.

மேலும், மண்டபம் பகுதியைச் சேர்ந்த சிவஞானம், ராஜசேகர் ஆகியோரது படகுகளையும் அதில் சென்ற மீனவர்கள் கருப்பையா முருகன், சண்முகம், ஆறுமுகம், தர்மலிங்கம், கோட்டைச்சாமி உள்ளிட்ட  8 பேரை  சிறைப்பிடித்து சென்றனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த தாமோதரன், சிங்கராஜ், குமார், பிரவின் உள்ளிட்ட ஐந்து மீனவர்களையும் அவர்கள் சென்ற ஒரு படகையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்து காங்கேசன் துறைமுக கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் விசாரணைக்குப்பின் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதனிடையே இந்திய எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடித்த இலங்கையைச் சேர்ந்த 13 மீனவர்களையும் நான்கு படகுகளையும் இந்திய கடலோரக் காவல்படையினர் நேற்று பகல் 2 மணியளவில் கைது செய்திருந்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பதிலடியாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களும் படகுகளும் சிறைப்பிடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழக மீனவர்கள் அச்சமும், பரபரப்பும் அடைந்துள்ளனர்.


[X] Close

[X] Close