`` மரக்கன்று வாங்கினால்தான் நீர்மோர்!" - தேர்த்திருவிழாவில் செல்லமாக கோரிக்கை வைத்த இளைஞர்கள் | Karur youngsters distributed tree Saplings to people

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (21/02/2019)

கடைசி தொடர்பு:12:20 (21/02/2019)

`` மரக்கன்று வாங்கினால்தான் நீர்மோர்!" - தேர்த்திருவிழாவில் செல்லமாக கோரிக்கை வைத்த இளைஞர்கள்

     

 மரக்கன்றுகளோடு கடவூர் இளைஞர்கள்

 

36 கிராமங்கள் ஒன்று திரளும் பிரபல கோயில் தேர்த்திருவிழாவின்போது, பத்தாயிரம் மரக்கன்றுகளை வழங்கி அசத்தி இருக்கிறார்கள் அந்தப் பகுதி இளைஞர்கள். அதோடு, `பாத்திரம் கழுவும்போது வீணாகும் தண்ணீரைக் கொண்டாவது இந்த மரக்கன்றுகளை வளர்க்கவும்' என்று  எழுதி வைத்து அந்த இளைஞர்கள் மரக்கன்றுகள் வழங்க, அது அந்தப் பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது.


 தேரோட்டம்

கரூர் மாவட்ட தென் எல்லையில் அமைந்திருக்கிறது கடவூர். இந்தக் கிராமத்தோடு சேர்த்து 36 கிராமங்கள் சுற்றிலும் இயற்கையாக வட்ட வடிவில் அமைந்துள்ள மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளன. இந்தக் கிராமத்தில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற ஸ்ரீகருணைகிரிப் பெருமாள் கோயிலில், மாசி மக திருவிழாவை ஒட்டி தேரோட்டம் நடைபெற்றது. 50,000-த்துக்கும் அதிகமான மக்கள் கூடிய இந்த திருவிழா, சுற்றுவட்டார பகுதிகளில் வெகுபிரபலம். இந்தத் தேரோட்டத்தின்போது அந்தப் பகுதி இளைஞர்களால் அமைக்கப்பட்டுள்ள `நம்மாழ்வார் வாட்ஸ்அப்' குழு மூலம்,தேரோட்டத் திருவிழாவுக்கு வருகைபுரிந்த பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. அதோடு, பத்தாயிரம் மரக்கன்றுகள் வாங்கி வந்து, அதை பக்தர்களுக்கு வழங்கி, `மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டால்தான், நீர்மோர்' என்று சிறப்பித்தனர்.

மரக்கன்றுகள் வழங்கப்பட்டபோது...

மாணவர்கள், பெண்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என பலரும் இவர்கள் வழங்கிய மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டு, நீர்மோரை வாங்கி பருகிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தனர். அதோடு, சார்ட்டுகளில், `மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்' என்ற வழக்கமான வாசகங்களோடு, 'பாத்திரம் கழுவும்போது வீணாகும் தண்ணீரைக் கொண்டாவது, இந்த மரக்கன்றுகளை வளர்க்கவும்' என்று எழுதி வைத்திருந்தது, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

ராமசாமி


இதுபற்றி, நம்மிடம் பேசிய `நம்மாழ்வார் வாட்ஸ்அப்' குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராமசாமி, ``கடவூர் பகுதியே மிகவும் பின்தங்கிய பகுதி. மழை அளவு குறைவாக உள்ள பகுதி. கரூர் மாவட்டத்தில் மொத்தமே 4 சதவிகிதம்தான் காடுகளே இருக்கின்றன. அதில் 2 சதவிகிதம் காடு கடவூர் பகுதியில் இருந்துச்சு. ஆனா, சமீபத்தில் தாக்கிய கஜா புயலில், கடவூர் பகுதியில் பல மரங்கள் வேரோடு சாய்ஞ்சுட்டு. இதனால், பல கிராமங்கள் வறண்ட பாலைவனமா காட்சியளிக்குது. அவ்வளவு ஏன், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா நிரந்தரமா துயில் கொள்ளும் வானகத்திலேயே பல மரங்கள் வேரோடு சாய்ஞ்சுட்டு. அதனால், இந்தப் பகுதி இளைஞர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து, `இதுக்கு என்ன பண்ணலாம்'னு ஆலோசனை பண்ணினோம். அப்போதான், கருணைகிரிப்பெருமாள் கோயில் தேரோட்டத்தின்போது, மரக்கன்றுகள் வழங்கலாம்ன்னு முடிவு பண்ணினோம்.

10,000 மரக்கன்றுகளையும் வழங்கினோம். பலர் மரக்கன்றுகள் வாங்க ஆர்வம் இல்லாமல் இருந்தாங்க. அவர்களிடம், `மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டால்தான், நீர்மோர் தருவோம்'ன்னு சொன்னோம். பத்திரமா இந்த மரக்கன்றுகளை வளர்க்கணும்னு அவர்களுக்கு உணர்த்ததான், 'பாத்திரம் கழுவும்போது வீணாகும் தண்ணீரைக் கொண்டாவது, இந்த மரக்கன்றுகளை வளர்க்கவும்'னு எழுதி வைத்தோம். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். நம்மாழ்வார் அய்யா கடவூர் பகுதியையே சோலையாக்க முயற்சி பண்ணினார். ஆனா, அதுக்குள்ள மறைந்து போய்ட்டார். அவரின் கனவை நாங்க நிறைவேத்துவோம்!" என்றார் உணர்ச்சிப் பொங்க!.


[X] Close

[X] Close