2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி வந்தது எப்படி?- ஒரு வாரத்துக்குள் அறிக்கை கேட்கும் சுகாதாரத் துறை | Hiv infection for 2 years child near coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (21/02/2019)

கடைசி தொடர்பு:12:00 (21/02/2019)

2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி வந்தது எப்படி?- ஒரு வாரத்துக்குள் அறிக்கை கேட்கும் சுகாதாரத் துறை

2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி .... சர்ச்சையில் கோவை அரசு மருத்துவமனை


``மூச்சு திணறல் பாதிப்புக்காக சேர்க்கப்பட்ட இரண்டு வயது குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்டதாக அந்தக் குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  இது குறித்து ஒரு வாரத்துக்குள்  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோவை அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது”

திருச்சியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரின் மனைவி பெயர் சித்ரா. தற்போது திருப்பூரில் தங்கி வேலை செய்து வரும் இவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில்  ஆண், பெண் என ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு அவர்களது 2 வயது பெண் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.  உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள்.  இங்கு பார்க்க முடியாது என்று சொல்லி, அங்கிருந்து  கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். கோவை அரசு மருத்துவமனையில், அந்தக் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதைக் கண்டுபிடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில் குழந்தைக்கு ரத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்து ரத்தம் ஏற்றியுள்ளார்கள். இது நடந்து ஆறு மாதம் கழிந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தக் குழந்தைக்கு உடலெங்கும் தடிப்புகளும், காதுகளுக்குப் பின்புறம் கட்டிகளும் வந்துள்ளன. பதறிப்போன அக்குழந்தையின் பெற்றோர் மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து வந்துள்ளனர்.

2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி கோவை அரசு மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துரை உத்தரவு

ரத்தப் பரிசோதனையில் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், குழந்தையின் பெற்றோருக்கோ, இரட்டைக் குழந்தைகளில் இன்னொரு ஆண் குழந்தைக்கோ ஹெச்.ஐ.வி இல்லை. இந்த நிலையில்தான்,  குழந்தையின் பெற்றோர், ``திருச்சி மருத்துவமனையில் குழந்தை பிறந்ததிலிருந்து குழந்தைக்கு வேறு எங்கும் நாங்கள் வைத்தியம் பார்க்கவில்லை. கோவை அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தின் மூலமாகத்தான் எங்கள் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி வந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்க அது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு சாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இழைக்கப்பட்ட அதே அநீதியை 2 வயது பெண் குழந்தைக்கு கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் இழைத்துள்ளது. அரசு மருத்துவமனைகள் மக்களின் நலனில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளன என்பதற்கு  இந்த அவலச் சம்பவங்களே சாட்சி என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளித்தார்கள்.  

ஆனால், பெற்றோர்களின் இந்தக் குற்றச்சாட்டை கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் திட்டவட்டமாக  மறுத்துள்ளார். ``குழந்தைக்கு வேறு எங்காவது சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கலாம், அப்போது தவறு நடந்திருக்கலாம். எங்கள் மருத்துவமனையிலிருந்து ஹெச்,ஐ.வி பரவவில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தருமாறு கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு, சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை நிலைய அதிகாரிகள், செவிலியர்கள் உட்பட பலரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close