`சத்தியம் செய்தால் மட்டுமே கூட்டணி!’- ஓராண்டு நிறைவு விழாவில் கமல்ஹாசன் உறுதி | Makkal Needhi Maiam Party President kamalhaasan Hoisting the party flag at the Head Office

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (21/02/2019)

கடைசி தொடர்பு:12:33 (21/02/2019)

`சத்தியம் செய்தால் மட்டுமே கூட்டணி!’- ஓராண்டு நிறைவு விழாவில் கமல்ஹாசன் உறுதி

தமிழகத்தில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர்கள் சினிமாத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். அவர்கள் வரிசையில் கடந்த வருடம் அரசியலில் இறங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன்

கட்சித் தொடங்குவதற்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழகம் மற்றும் தேசிய அளவில் உள்ள பல அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு பிப்ரவரி 21, 2018-ம் ஆண்டு காலை ராமநாதபுரம் மாவட்டம் பேய்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய பின்னர் அன்று மாலை மதுரை ஒத்தக்கடையில் ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார் கமல்ஹாசன். அந்தப் பொதுக்கூட்டத்தில்தான் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சிப் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

கமல்ஹாசன்

அதன் பின்னர் தமிழகத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல ஊர்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார் கமல்ஹாசன். தமிழக அரசியல், தேசிய அரசியல் என அனைத்தையும் விமர்சித்து வருகிறார். இதற்கிடையில் தன் கட்சியின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரை நியமித்து முழு நேர அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்றதை ஒட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கட்சிக் கொட்டியை ஏற்றிவைத்து தொண்டர்கள் மத்தியில் பேசினார் கமல். 

கமல்ஹாசன்

அவர் பேசும் போது, `` இன்றுடன் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு வயது ஆகிறது. இதைச் சிறப்பாக வளர்த்தெடுத்த நம் குடும்பத்துக்கு என் நன்றிகள். நான் பள்ளிக்குப் போகாத பிள்ளையாக இதே தெருவில் பல நாள்கள் திரிந்தேன். எனக்குத் தெரிந்த ஒரு முகமாவது கண்ணில் பட்டுவிடாதா என்ற ஆவலுடன் அலைந்தேன். அதன் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக கூடியக் கூட்டம் தற்போது தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் என்ற குடும்பமாக பரவியுள்ளது. முதலில் கட்சி பற்றி நாங்கள் பேராசை கொண்டோம் அதையும் தாண்டி, எங்கள் கட்சி தற்போது நம் கட்சியாக வளர்ந்துள்ளது. இன்று இங்கே கொடி ஏற்றியுள்ளோம். தமிழகத்தில் பல இடங்களிலும் இதேபோன்று கொடி ஏறிக்கொண்டு வருகிறது. அடுத்து அதை எங்கே ஏற்ற வேண்டும் என்ற இலக்கு உங்களுக்குத் தெரியும். அதை நோக்கி நகர்வோம். 

கமல்ஹாசன்

மேலே மழை பொழிகிறதா, புயல் அடிக்கிறதா என்று குளத்தடி மீனுக்கு தெரியாது. இதுவரை குளத்தடி மீன் போல இருந்த மக்கள் வெளியில் வந்துள்ளார்கள். அரசியல் உதவாக்கரைகள் உடைந்து மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது குளம் வேறு , நதி வேறு இல்லை. குளத்து மீன் நதிக்கு வந்துவிடும். நம் உறவு தமிழகம் முழுவதும் வளர்ந்துகொண்டிருக்கிறது.  மக்கள் என் கையைப் பிடித்து நாடி பார்த்து இங்கே புத்துயிர் உள்ளது எனக் கண்டுபிடித்துள்ளனர். இதன் பிறகு எந்தக் கணிப்பு எப்படிச் சொன்னாலும் சரி எனக்குக் கவலையில்லை. அவர்களை நம்பி நான் அடியெடுத்துவைத்துள்ளேன். நீங்கள் பேசுவது புரியவில்லை என நேற்று வரை பலர் கூறிக்கொண்டு இருந்தார்கள்.  ஆனால், இறுதிவரையில் அது புரிந்துவிடக்கூடாது எனப் பிரார்த்தனை செய்தவர்கள் அவர்கள். இன்று அவர்களுக்குப் புரிய ஆரம்பித்ததற்கு காரணம் நான் என் ஸ்ருதியை (Pitch) அதிகப்படுத்தியுள்ளேன். இது இன்னும் உயரும். தமிழகம் மற்றும் தமிழகத்தில் நடக்கும் ஊழலை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஊழலா எங்கே என்று நம்மையே கேட்கும் அவர்களுக்கு உலகம் பதில் சொல்லும். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் ஒரு சிறிய கருவியாக நானும் உள்ளேன். வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் தமிழகம் மேம்படட்டும்’ எனப் பேசினார்.

கமல்ஹாசன்

இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் பேசிய கமல்ஹாசன். `` கட்டுக்கட்டாக புத்தகம் போல் கொள்கைகளை வெளியிட்டவர்கள். தற்போது தங்கள் கொள்கைகளை காலில் போட்டு மிதித்துப் படியேறி கூட்டணிகளைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நிலையில், மக்கள் நலன் என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் ஒரே இலக்கு. வரும்காலத்தில் தமிழக கட்சியுடன்  நாங்கள் கூட்டணி வைப்போம். ஆனால், அவர்கள் மக்கள் நலனில் சத்தியம் செய்து தரவேண்டும். அப்போது மட்டுமே எங்கள் கூட்டணி உறுதியாகும். ஆனால், தற்போது சத்தியம் செய்தால்கூட போதாது. ஏனெனில் அப்படி சத்தியம் செய்தவர்கள் அனைவரும் ஒன்று கூடிவிட்டார்கள். நாங்கள் மாய வித்தைகள் செய்கிறோம் என்று மக்களை மயக்கியது கிடையாது. எங்களால் எது முடியுமோ அதைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம். என் பெயரை நீங்கள்தான் மரியாதையாக அழைக்க வேண்டும். நானே என்னை மரியாதையாக அழைத்துக்கொள்ளக் கூடாது. அதேபோல் மெகா கூட்டணி என்பதை மக்கள் கூற வேண்டும். தாங்களே மெகா கூட்டணி எனக் கூறிக்கொள்ள கூடாது’ என்று விமர்சித்தார்.


[X] Close

[X] Close