அமைச்சர் வீரமணி மீது வழக்குத் தொடர்ந்த வேலூர் தொழிலதிபர்களின் வீடுகளில் ஐ.டி ரெய்டு!  | Income tax Raid at real Estate Businessmen's home

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (21/02/2019)

கடைசி தொடர்பு:13:30 (21/02/2019)

அமைச்சர் வீரமணி மீது வழக்குத் தொடர்ந்த வேலூர் தொழிலதிபர்களின் வீடுகளில் ஐ.டி ரெய்டு! 

வேலூரில் உள்ள பிரச்னைக்குரிய நிலம் விவகாரம் தொடர்பாக, அமைச்சர் கே.சி.வீரமணி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த, காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் இருவரின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தி.மு.க பிரமுகர் ஒருவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. 

காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள்

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுந்தர்ராஜன் என்பவருக்குச் சொந்தமான 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை, காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் 2010-ம் ஆண்டு குத்தகைக்கு எடுத்து ‘சாய் சிட்டி சென்டர்’ பெயரில் நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு விட்டனர். இதன் பின்னர் சில மாதங்கள் கழித்து, நிலத்தை விற்க அதன் உரிமையாளர் முடிவு செய்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பரும் தொழிலதிபருமான சேகர்ரெட்டி உட்பட 3 பேர், அந்த இரண்டு ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் கைகோத்தனர். இந்த 5 பேரும் சேர்ந்து முதலீடு செய்து நிலத்தை மேம்படுத்தி விற்பனை செய்வது எனவும், நிலத்தின் மதிப்புக்கேற்ற தொகையை உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு, மீதித் தொகையை பங்கு பிரித்துக்கொள்வது எனவும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். 

சில ஆண்டுகள் கழித்து, அமைச்சர் கே.சி.வீரமணியின் நண்பர்களான ஆந்திராவைச் சேர்ந்த இருவருக்கு அந்த நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபர்கள் விற்றனர். நிலத்தின் மதிப்பு ரூ.300 கோடி என்று கூறப்படுகிறது. `ஜோத்ரி மை எஸ்டேட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் நிலம் கிரயம் செய்யப்பட்டது. திடீரென, சேகர்ரெட்டியே அந்த நிலத்தை வாங்கிக்கொண்டார். நிலத்தின் உரிமையாளரான சுந்தர்ராஜனுக்கு 30 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. நிலத்தை மேம்படுத்தியதற்காக ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் இருவருக்கும் ரூ.65 கோடி தருவதாக சேகர்ரெட்டி கூறியிருந்தார். முதற்கட்டமாக, 19 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். மீதித் தொகையை தருவதில் தான் பிரச்னை ஏற்பட்டது. சேகர்ரெட்டிக்கு ஆதரவாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலையிட்டதாகக் கூறப்படுகிறது.

வருமானவரித்துறையினர் சோதனை

இதுதொடர்பாக அமைச்சர் வீரமணி, சேகர்ரெட்டி மீது காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் இருவரும், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் வேலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். கடந்த 19-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், ``வேலூரில் பிரச்னைக்குரிய ரூ.300 கோடி நில விவகாரத்தில் அமைச்சர் வீரமணிக்குத் தொடர்பில்லை. அவர், பதவியைப் பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை’’ என்று அமைச்சரின் தரப்பில் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 25-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க பிரமுகர் சிவக்குமாரின் அடுக்குமாடி வீடு

இந்த நிலையில், அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த, ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் இன்று காலை 7 மணி முதல் வருமானவரித் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்திவருகின்றனர். காட்பாடி காந்திநகர் 8-வது குறுக்குத் தெருவில் உள்ள தொழிலதிபர் ராமமூர்த்தி வீடு மற்றும் அதே பகுதியில் டாக்டர் கோபால கிருஷ்ணா நகரில் உள்ள ஜெயப்பிரகாஷ் வீட்டிலும் வருமானவரித் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஜெயப்பிரகாஷ் தன்னுடைய மனைவியுடன் சிங்கப்பூர் சென்றிருக்கிறார். வீட்டில் அவரின் வயதான தாய் மட்டுமே உள்ளார். இரண்டு தொழிலதிபர்களின் வீடுகள் முழுவதும் சல்லடைப் போட்டு சோதனை நடத்தப்பட்டுவருகிறது. மேலும், பிரச்னைக்குரிய நிலத்தின் அருகில் உள்ள தொழிலதிபர்களின் சாய் சிட்டி சென்டர் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

இதேபோல், கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடப்பதாகத் தகவல் வெளியாகின. விசாரித்தபோது, கே.வி.குப்பம் ரூசா டவுன்ஷிப் பகுதியில் இன்ஸ்பெக்டர் வசிக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரான தி.மு.க பிரமுகரும், ஒப்பந்ததாரருமான சிவக்குமாரின் அடுக்குமாடி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


[X] Close

[X] Close