`ஆபீஸிலே இருக்கோம், மகிழ்ச்சிதான்!' - நெல்லை கலெக்டருக்கு வி.ஏ.ஓ-க்கள் பதில் | controversy over district collector and VAOs in nellai

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (21/02/2019)

கடைசி தொடர்பு:14:20 (21/02/2019)

`ஆபீஸிலே இருக்கோம், மகிழ்ச்சிதான்!' - நெல்லை கலெக்டருக்கு வி.ஏ.ஓ-க்கள் பதில்

கிராம நிர்வாக அலுவலர்களைக் கடுமையாக எச்சரித்து வாட்ஸ் அப் ஆடியோவை நெல்லை மாவட்ட கலெக்டர் வெளியிட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வி.ஏ.ஓ-க்கள் வாட்ஸ் அப் ஆடியோக்களை வெளியிட்டுள்ளனர். எதிரும் புதிருமாக வெளியிடப்பட்ட இந்த ஆடியோக்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. 

கலெக்டர் ஷிலா பிரபாகர்சதீஷ்

மத்திய பட்ஜெட்டில், 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ.6,000 உதவித்தொகை மூன்று கட்டங்களாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ’கிஸான் சம்மான் யோஜனா’ என்கிற இந்தத் திட்டத்தின் முதல் தவணைத் தொகையை வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பயனாளிகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கான பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

இந்தப் பணிகளை விரைவாகச் செய்து பயனாளிகள் பட்டியலைத் தயாரிக்குமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் வி.ஏ.ஓ-க்கள் இரவு பகலாக பணிகளைச் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பேசிய வாட்ஸ்அப் ஆடியோ நேற்று வெளியானது. அதில் ’கிராம நிர்வாக அதிகாரிகள் சரிவரப் பணியாற்றுவதில்லை. அலுவலகத்திலேயே இருப்பதில்லை. 

அதனால் நிறைய பேர் என்னிடமே நேரடியாக வந்து விண்ணப்பங்களைக் கொடுக்கிறார்கள். அனைத்து வி.ஏ.ஓ-க்களும் அவர்களுக்கான பணியிடத்தில் இருக்க வேண்டியது அவசியம். அதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். காலை முதல் மாலை வரை அனைத்து வி.ஏ.ஓ-க்களும் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பெற வேண்டும். எந்த வி.ஏ.ஓ-வும் சரியாக வேலை செய்வதில்லை. அதனால் சர்ப்ரைஸ் விசிட் அடிக்க இருக்கிறேன். அப்போது அலுவலகத்தில் இல்லாத வி.ஏ.ஓ-க்களை சஸ்பெண்டு செய்வேன்’’ எனக் காட்டமாகப் பேசியிருந்தார்.

நெல்லை கலெக்டர்

அந்த ஆடியோவை கேட்ட வி.ஏ.ஓ-க்கள் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள். எந்த அடிப்படை வசதியும் இல்லாத அலுவலகத்தில் இரவு பகலாக வேலை செய்த நிலையிலும் இதுபோன்று ஆட்சியர் பேசியிருப்பதைக் கண்டிக்கும் வகையில் அவர்களும் வாட்ஸ்அப் மூலமாக தங்களின் மனக் குமுறலைப் பதிவிட்டு இருக்கிறார்கள். ஓர் ஆண் மற்றும் பெண் வி.ஏ.ஓ-க்கள் என இருவர் பேசியதாக வெளியாகியிருக்கும் வாட்ஸ்அப் ஆடியோவில், ஆட்சியரின் பேச்சை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.  

அதில், ‘வி.ஏ.ஓ-க்கள் சரியாக வேலை செய்யாததால் தான் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து விவசாயிகள் விண்ணப்பத்தைக் கொடுப்பதாகப் பேசியிருக்கிறீர்களே, அப்படிப்பட்ட வி.ஏ.ஓ-க்களை சஸ்பெண்டு செய்வேன் என்கிறீர்களே. நீங்கள் அலுவலகத்தில் இருக்கும்போதே, உங்களை மீறி முதல்வரின் தனிப்பிரிவுக்கும், ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் மனுக்களை மக்கள் அனுப்புகிறார்களே.

நீங்கள் விசிட்டுக்கு வரும்போது அலுவலகத்தில் இருக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறீர்கள். நாங்கள் ஆசிரியர் அல்லது டாக்டர் போல வேலை செய்யவில்லை. எங்களுடைய பணியே கிராமங்களில் சுற்றுவதுதான். நாங்களும் அலுவலகத்திலே இருக்க வேண்டும் எனச் சொன்னால் எங்களுக்கு மகிழ்ச்சியே. எந்த அடிப்படை வசதியும் இல்லாவிட்டாலும்கூட அலுவலகத்திலேயே இருக்கத் தயாராக இருக்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளனர். 

கலெக்டர் அலுவலகம்

மாவட்ட ஆட்சியரின் ஆடியோவும் அதற்குப் பதிலளிக்கும் வகையில் வி.ஏ.ஓ-க்கள் பேசியிருக்கும் ஆடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. ஆட்சியரின் ஆடியோவைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பாக மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். அதனால் இந்த விவகாரம் தமிழக அரசுக்குத் தலைவலியாக உருவாகியிருக்கிறது. 


[X] Close

[X] Close