`கொள்கைகளை பறக்கவிட்டு கூட்டணி சேர்கிறார்கள்!' - கமல் குற்றச்சாட்டு | MNM party will Release mp election candidates list says Kamal

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (21/02/2019)

கடைசி தொடர்பு:14:40 (21/02/2019)

`கொள்கைகளை பறக்கவிட்டு கூட்டணி சேர்கிறார்கள்!' - கமல் குற்றச்சாட்டு

``மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
 
கமல்
 
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்ததையடுத்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து திருச்சி வழியாக நாகப்பட்டினம் செல்லும் கமல்ஹாசன், திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். மக்கள் நீதி மையத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமையில் திரண்ட அக்கட்சித் தொண்டர்கள் கமல்ஹாசனுக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தனர். திருச்சி விமான நிலையத்தில் வி.ஐ.பி நுழைவாயில் வழியாக வெளியே வந்த கமல்ஹாசன் தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக்கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்தார்.
 
அப்போது அவர், ``மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் வரும் 24-ம் தேதிக்குப் பிறகு படிப்படியாக வெளியிடப்படும். இந்த வேட்பாளர் பட்டியலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கொள்கைகளைப் பறக்க விட்டுவிட்டு கட்சிகள் கூட்டணி பற்றி பேசுகிறார்கள். ஆனால், மக்கள் நலனே எங்களின் மூல இலக்கு. யாருடன் கூட்டணி என்பதை மக்கள்தான் முடிவு  செய்யவேண்டுமே தவிர கூட்டணி ஏற்படுத்திய காட்சிகளே மெகா கூட்டணி எனச் சொல்லிக் கொள்ளக் கூடாது. மக்கள் நலன் என கட்டுக்கட்டாக புத்தகங்களை வெளியிட்ட கட்சிகள், இப்போது கூட்டணியில் இணைந்து விட்டன" என்றார்.
 
கமல்ஹாசன்
 
தொடர்ந்து கமல்ஹாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக காரில் கிளம்பிச்சென்றார். அவரைப் பின் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் செல்வதால் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு நிலவியது. சென்னையில் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி கட்சியின் கொடியை ஏற்றினார் கமல்ஹாசன். இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கட்சிக் கொடி அக்கட்சியினரால் ஏற்றப்படுகிறது. இந்தக் கொடியை அடுத்து எங்கே ஏற்ற வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும் எனக் கமல் கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்னும் சில தினங்களில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அக்கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிட உள்ளதாக கமல் அறிவித்துள்ளது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close