சொகுசு காரில் சீறிப்பாய்ந்த மாணவி... கண்ணிமைக்கும் நொடியில் இளைஞருக்கு நடந்த பயங்கரம் | Shocking CCTV Footage in coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (21/02/2019)

கடைசி தொடர்பு:21:09 (23/02/2019)

சொகுசு காரில் சீறிப்பாய்ந்த மாணவி... கண்ணிமைக்கும் நொடியில் இளைஞருக்கு நடந்த பயங்கரம்

கோவையில் அதி வேகமாகக் காரை ஓட்டி வந்தவர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது மோதிய வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து

கோவை அவினாசி சாலையில் கொடிசியா தொழிற்காட்சி வளாகம் உள்ளது. இந்தப் பகுதியைச் சுற்றி மொத்தம் நான்கு தனியார் பள்ளிகளும், ஐந்து கல்லூரிகளும் உள்ளன. குறிப்பாக, இங்குள்ள கல்லூரி மாணவர்கள் வாகனங்களைப் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக ஓட்டிவருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை 4.42 மணியளவில் TN 38 AJ 1383, என்ற சொகுசு காரும் மற்றொரு சொகுசு காரும் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஜென்னி கிளப் பகுதியில் இருந்து கொடிசியா தொழிற்காட்சி வளாகம் சாலை வழியாக அதிவேகமாகப் போட்டி போட்டுக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது  இஸ்கான் கோயில் சாலையிலிருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது சொகுசு காரை ஓட்டி வந்தவர் மோதினார். இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். காரை ஓட்டி வந்த நபர்கள் காரை நிறுத்தாமல் அதிவேகமாகச் சென்றனர். இந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக, அந்த இளைஞர் ஹெல்மெட் அணிந்து வந்ததாகவும், அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் அதிவேகமாகச் சென்ற காரை துரத்திப் பிடிக்க முற்பட்டனர். ஆனால், கார் சென்ற வேகத்துக்குப் பிடிக்க முடியவில்லை. பின்னர் தகவலறிந்து வந்த பீளமேடு போக்குவரத்து போலீஸார், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில், காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது பெண், குனியமுத்தூரைச் சேர்ந்த தட்ஷணா ரூத் என்று தெரியவந்துள்ளது. இவர் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் மீது, இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இளைஞர் தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவையில் சமீப காலமாகப் போதை மருந்து பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், விபத்து ஏற்படுத்திய தட்ஷணாவும் போதையில் தான் விபத்து ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.


[X] Close

[X] Close