`விஸ்வரூபம் எடுக்கும் ரூ.300 கோடி நில விவகாரம்!’ - அமைச்சர் வீரமணி அலுவலகத்தில் ஐ.டி ரெய்டு | IT raid at Minister Veeramani's place

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (21/02/2019)

கடைசி தொடர்பு:15:10 (21/02/2019)

`விஸ்வரூபம் எடுக்கும் ரூ.300 கோடி நில விவகாரம்!’ - அமைச்சர் வீரமணி அலுவலகத்தில் ஐ.டி ரெய்டு

வேலூரில் உள்ள ரூ.300 கோடி நில விவகாரம் தொடர்பாக, அமைச்சர் கே.சி.வீரமணியின் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில், டெல்லியில் இருந்துவந்த வருமானவரித் துறை உயரதிகாரிகள் தலைமையில் தீவிர சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

அமைச்சர் கே.சி.வீரமணி

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரச்னைக்குரிய ரூ.300 கோடி மதிப்பிலான நில விவகாரத்தில், அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில், அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த, காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்திவருகின்றனர். அதே நேரத்தில், அமைச்சர் வீரமணியின் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். 

இதற்காக டெல்லியில் இருந்துவந்த வருமானவரித் துறை உயரதிகாரிகள் குழு, இங்குள்ள வருமானத் துறையினருடன் இணைந்து சுமார் 10 கார்களில் இன்று காலை ஒரே நேரத்தில் ஜோலார்பேட்டையில் உள்ள அமைச்சர் வீரமணியின் அலுவலகம் மற்றும் காட்பாடியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். நாட்றம்பள்ளி மெயின் ரோட்டில் உள்ள அமைச்சரின் ஆர்.எஸ்.மஹால் மற்றும் அந்த மண்டபத்தின் மேலாளர் சத்தியமூர்த்தியின் வீடு, அமைச்சரின் உதவியாளரும் ஜோலார்பேட்டை அ.தி.மு.க நகரச் செயலாளருமாக உள்ள சீனிவாசன் வீடு உட்பட அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

ரூ.300 கோடி நிலம்

இந்த நில விவகாரத்தில் தொடர்புடைய, அமைச்சர் கே.சி.வீரமணியின் நண்பர்களான ஆந்திராவைச் சேர்ந்த பால் நிறுவன உரிமையாளர்கள் பிரம்மானந்தம் தண்டா மற்றும் சத்திய நாராயணாவுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரச்னைக்குரிய அந்த நிலத்தின் மதிப்பு ரூ.300 கோடி என்று கூறப்படுவதால், அவ்வளவு பணம் கைமாறிய விவகாரத்தில் தொடர்புடைய அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அமைச்சர் வீரமணிக்கு எதிரான ஆவணங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அமைச்சரின் மண்டபத்தில் சோதனை நடந்தபோது, அங்குச் செய்தி சேகரிக்கச் சென்ற இரண்டு நிருபர்களைப் பிடித்து மண்டபத்தின் அறையில் தள்ளி பூட்டினர். ஒரு நிருபரின் செல்போனை அதிகாரிகள் பறித்தனர். பின்னர், சக நிருபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அந்த இரண்டு நிருபர்களும் விடுவிக்கப்பட்டனர். செல்போனையும் திருப்பிக் கொடுத்தனர். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது. மேலும், இந்த நில விவகாரத்தில் தொடர்புடைய தி.மு.க எம்.எல்.ஏக்கள் நந்தகுமார் மற்றும் ஆர்.காந்தியின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அடுத்தகட்டமாகச் சோதனை நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 


[X] Close

[X] Close