அண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்..! - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன? | Latest update on DMDK alliance talk

வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (21/02/2019)

கடைசி தொடர்பு:15:42 (21/02/2019)

அண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்..! - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன?

தேமுதிக விஜயகாந்த்தை சந்தித்த பியூஸ்கோயல்

நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க யாருடன் கூட்டணி என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணி, தி.மு.க கூட்டணி ஆகியவற்றிலிருந்து தே.மு.தி.க-வுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதால், விஜயகாந்த்துக்கு மவுசு அதிகரித்துள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழக அரசியல் கட்சிகளை உஷ்ணமாக்கியுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தையில் கட்சித் தலைவர்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் பிஸியாக இருந்துவருகின்றனர். தேசிய கட்சிகளைச் சேர்ந்த தமிழகத் தேர்தல் பொறுப்பாளர்கள், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கி கூட்டணி தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். 

ஜெயலலிதாவைப் போல அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கூட்டணி அறிவிப்பை அதிகாரபூர்வமாக முதலில் வெளியிட்டுள்ளனர். அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 7 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கும்போது, அ.தி.மு.க-வுக்கு பா.ம.க ஆதரவளிக்கும் என்றும் அ.திமு.க., பா.ம.க இணைந்து வெளியிட்ட கூட்டணி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேமுதிக விஜயகாந்த்தை சந்தித்த திருநாவுகரசர்

காங்கிரஸ் தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என மொத்தம்  10 தொகுதிகள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க என இதர கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் முழுமையான வெற்றிபெற அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் கணக்குப்போட்டு கூட்டணி அமைத்துவருகின்றன. தமிழகத்தில் கணிசமான வாக்குவங்கிகளை வைத்திருக்கும் தே.மு.தி.க-வை தங்கள் பக்கம் இழுக்க, பா.ஜ.க-வும் காங்கிரஸ் கட்சியும் ஆர்வம்காட்டிவருகின்றன. 

கூட்டணி பேச்சுவார்த்தையையொட்டி, வெளிநாட்டு சிகிச்சை முடிந்து திரும்பிய விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க-வின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ்கோயல், விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றார். அவரின் உடல் நலத்தை விசாரித்ததாக பேட்டியளித்தார். ஆனால், உண்மையில் அங்கு கூட்டணி பேச்சுவார்த்தைதான் நடந்ததாக கட்சியின் உள்வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதற்கிடையில் பா.ஜ.க., அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட தகவல் வெளியானது. ஆனால், பா.ம.க-வுக்கு ஏழு தொகுதிகள் கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைவிடக் கூடுதலாக ஒரு தொகுதி என 8 தொகுதிகள் வேண்டும் என்று தே.மு.தி.க தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தே.மு.தி.க-விடம் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசித்து பதில் சொல்வதாகக் கூறியுள்ளனர். 

 தேமுதிக சுதீஷை சந்தித்த திருநாவுகரசர்

இந்த நிலையில்தான், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இது, பா.ஜ.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சென்றால் அது வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என அ.தி.மு.க கூட்டணி கட்சியினர் கருதுகின்றனர். இதனால், தே.மு.தி.க கேட்கும் தொகுதிகளைக் கொடுக்கலாமா என்ற தீவிர ஆலோசனையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து தே.மு.தி.க. தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``தமிழகத்தில் தே.மு.தி.க-வுக்கென தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்  தேர்தல்களில், தே.மு.தி.க-தான் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில், கடந்த முறை பா.ஜ.க கூட்டணியில் இருந்தோம். இந்த முறையும் வெற்றி பெறக்கூடிய பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெறதான் அண்ணியார் (பிரேமலதா) மற்றும் கட்சித் தலைமை விரும்புகிறது. ஆனால், அவர்கள் கொடுப்பதாகச் சொல்லும் 5 சீட்டுகள் என்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை

பா.ம.க-வுக்கு 7 சீட்டுகள், ஒரு ராஜ்ய சபா சீட் என 8 கொடுக்கும்போது, அவர்களுக்கு நிகராக எங்களுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அ.தி.மு.க கூட்டணியில் எங்களுக்கு இழுபறி என்ற தகவல் வெளியானதும், காங்கிரஸ் கட்சி சார்பில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொண்டர்களைப் பொறுத்தவரை தி.மு.க கூட்டணியில் இடம் பெறலாம் என்ற மனநிலையில் இருக்கின்றனர். இதனால், யோசித்து முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். கூட்டணி பேச்சுவார்த்தையில் எம்.பி தேர்தலை மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகள், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டும், தே.மு.தி.க-வின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் முடிவு எடுக்கப்படும். இதனால்தான், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துவருகிறது. இன்னும் சில தினங்களில், தே.மு.தி.க யாருடன் கூட்டணி என்பது முடிவாகிவிடும்" என்றார். 

 தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வை இழுக்க தீவிர முயற்சிகள் நடப்பதாக தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் கூறினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ``அ.தி.மு.க-வுடன் தே.மு.தி.க கூட்டணி அமைத்த காரணத்தால், சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி வாய்ப்பை இழந்தது. அதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழகத்தில் தி.மு.க கூட்டணி வலுவாக இருந்துவருகிறது. அதற்கு மேலும் வலுவாக, தே.மு.தி.க-வை எங்கள் பக்கம் இழுக்கலாம் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும் விஜயகாந்த்தும் நீண்ட கால நண்பர்கள். அந்த அடிப்படையில்தான் அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். அதில், கூட்டணிகுறித்து சில முக்கிய ஆலோசனை நடந்துள்ளது. தே.மு.தி.க கேட்டுள்ள சீட்டுகளை ஒதுக்கீடுசெய்வதுகுறித்து விவாதிக்கப்படும். அதில் எடுக்கப்படும் முடிவு தே.மு.தி.க-வுக்கு தெரிவிக்கப்படும். தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன" என்றனர். 

 விஜயகாந்த்தை சந்தித்த பாஜகவினர்

அ.தி.மு.க., பா.ஜ.க வட்டாரத்தில் விசாரித்தபோது, ``தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெறுவதாகச் சொல்வது பகல் கனவு காண்பதைப்போன்றது. ஏனெனில், பா.ஜ.க., அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சேருவது இன்று எடுக்கப்பட்ட முடிவல்ல. அது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. தொகுதி இழுபறிக்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும். தே.மு.தி.க தலைமையுடன் எங்களுக்கு சுமுக உடன்பாடு உள்ளது. கூட்டணி என்றால் பேச்சுவார்த்தை இழுபறி எல்லாம் இருக்கத்தான் செய்யும்" என்றனர். 


[X] Close

[X] Close