சோமனூர் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணி... வீடு கட்டிக்கொடுத்து ஆறுதல் சொன்ன இளைஞர்கள்! | A new house donated by the youngsters for somanur bus stand accident victim

வெளியிடப்பட்ட நேரம்: 16:44 (21/02/2019)

கடைசி தொடர்பு:16:44 (21/02/2019)

சோமனூர் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணி... வீடு கட்டிக்கொடுத்து ஆறுதல் சொன்ன இளைஞர்கள்!

"இரண்டு வெத்தலையை வாங்கிப் போட்டுட்டு பஸ்ஸுக்காக நின்னுட்டு இருந்தேன். புள்ளைங்க வர்றதுக்குள்ள சீக்கிரமே வீட்டுக்குப் போயி சோறு செஞ்சு வெச்சிடணும்னு நெனெச்சிட்டு இருந்தேன். டமார்னு ஒரு சத்தம்தான். அந்த இடமே புகையாப் போச்சு. என் வாழ்க்கையும் அப்போதிருந்து இருட்டாப் போச்சு!"

சோமனூர் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணி... வீடு கட்டிக்கொடுத்து ஆறுதல் சொன்ன இளைஞர்கள்!

கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலைய கட்டட விபத்து நிகழ்ந்து 2 வருடங்கள் ஆகின்றன. 5 பேரைக் காவு வாங்கியும், பலரது உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டும்போன அந்தச் சம்பவத்திலிருந்து பல குடும்பங்கள் இன்னும் மீண்டெழவில்லை. இந்த நிலையில் அந்த விபத்தில் பாதிக்கப்பட்டுக் கால் துண்டாகிப்போன ஏழைப் பெண்மணி விஜயா என்பவர் தங்குவதற்கு வீடு இல்லாமல் தவித்து வந்தார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர், அந்தப் பெண்ணுக்குப் புதிதாக வீடு கட்டிக்கொடுத்து பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர்.

விஜயாவின் புதிய வீடு

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. 45 வயதான இவர் ஒரு கட்டடத் தொழிலாளி. கடந்த 2017-ம் ஆண்டு சோமனூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக விஜயா காத்திருந்தபோது, திடீரென பேருந்துநிலைய மேற்கூரை இடிந்து விழுந்து பெரும் விபத்து நேரிட்டது. இதில் 5 பேர் வரை பலியாகிப் போனார்கள். பலர் படுகாயமுற்று இன்று வரை நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அதில் விஜயாவும் ஒருவர். அந்த விபத்தின் மூலம் கை, கால்களை இழந்து உடல் ஊனமுற்றுப் போனவர்களுக்கு 50,000 உதவித்தொகையை வழங்கி தன் கடமையை முடித்துக்கொண்டது தமிழக அரசு. ஆனால், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் இன்றுவரை அந்த விபத்திலிருந்து மீண்டெழ முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.

விஜயாவின் கணவர் கிட்டான் பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். கார்த்திக், பிரகேஷ் என்ற தன்னுடைய இரண்டு  குழந்தைகளுடன் சிமென்ட் சீட்டுகளைச் சுற்றியிருந்த வீட்டுக்குள் குடும்பம் நடத்திவந்தார், விஜயா. சொந்த பந்தங்கள் அருகிலேயே வசித்துவந்தாலும், தன் பிள்ளைகள் பசியாற ஓடியோடி உழைத்தார் விஜயா. தனியாளாகப் போராடி ஈட்டிய கூலிப் பணத்தால் வயிற்றைக்கூட நிரப்ப முடியவில்லை. முடிந்தவரை பார்த்துவிட்டு, வேறு வழியின்றி தன் இரு மகன்களையும் கட்டட வேலைக்கே அனுப்பிவைத்தார் விஜயா. அதன்பிறகும்கூட வீட்டிலேயே ஓய்ந்துவிடாமல் நாள் முழுக்க உழைத்துக்கொண்டே இருந்தார். இந்த நிலையில்தான், விபத்து நடந்த அன்றைய தினம் சோமனூர் பேருந்து நிலையம் வந்த விஜயாவுக்கு, அந்தத் துயரச் சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் விஜயாவின் இடது கால் முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட, வலது கால் அசைக்கவே முடியாதவாறு செயலிழந்துபோய் உடலிலேயே ஒட்டிக்கொண்டிருக்கிறது. பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்றவர் படுத்த படுக்கையானார். வயதான தாயார் கருப்பம்மாள்தான் துணையாக இருக்கிறார். அருகில் உள்ள உறவுக்காரர்கள் சோற்றுக்கு வழி செய்கிறார்கள். 

பிரபாகரன்

இப்படியே வாழ்க்கை இருண்டுபோய்விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்த விஜயாவுக்கு லேசானதொரு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் சில நல்லுள்ளம் படைத்தவர்கள். விஜயாவுக்குச் சொந்தமான 2 சென்ட் நிலத்தில் அவருக்கு ஒரு வீடு கட்டிக் கொடுத்து உதவி செய்திருக்கின்றனர், அவர்கள். ரூபாய் 2 லட்சம் செலவில் கட்டப்பட்டிருக்கும் அந்த வீட்டின் புதுமனை புகுவிழா சமீபத்தில் நடைபெற்றது. 

விஜயாவுக்கு வீடு கட்டிக்கொடுத்த தன்னார்வலர்களில் ஒருவரான பிரபாகரன் என்பவரிடம் பேசினோம். ``சோமனூர் பேருந்து நிலைய விபத்து, அவ்வளவு எளிதாகக் கடந்துபோய்விடக்கூடியது அல்ல. 5 பேர் உயிரை இழந்திருக்கிறார்கள். பலருக்குப் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது மீண்டும் அங்கே புதிதாகப் பேருந்து நிலையம் அமைக்கப் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், இன்றுவரை அந்த விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியிடப்படாமல் இருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகையாக 50,000-த்தை அரசு வழங்கியது. அந்தப் பணம் எதற்குப் பத்தும்? உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். அரசு கண்டுகொள்ளவில்லை. அதற்காகப் போராட்டம் நடத்தினோம். எங்கள் மீது வழக்கு பதிவுசெய்ததுதான் மிச்சம். இனியும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டாம் என்று யோசித்துத்தான் நண்பர்கள் பலர் இணைந்து பாதிக்கப்பட்ட பெண் விஜயாவுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறோம்" என்றார்.

விஜயா

விஜயாவின் வீட்டுக்குச் சென்று அவரை நேரில் சந்தித்தோம். வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கப் பிடிக்காமல், தினமும் தவழ்ந்துகொண்டே வந்து சாலையோரத்தில் அமர்ந்துகொள்கிறார். அந்த வழியே போய் வருபவர்களிடம் தன் வலியையும் வேதனைகளையும் சொல்லி அழுகிறார். புதிய வீட்டுக்குக் குடிபுகுந்த மகிழ்ச்சி அவரது முகத்தில் சிறிய ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. ஆனால், மனம் முழுவதும் அந்த விபத்துச் சம்பவமே சூழ்ந்து நிற்கிறது. "இரண்டு வெத்தலையை வாங்கிப் போட்டுட்டு பஸ்ஸுக்காக நின்னுட்டு இருந்தேன். புள்ளைங்க வர்றதுக்குள்ள சீக்கிரமே வீட்டுக்குப் போயி சோறு செஞ்சு வெச்சிடணும்னு நெனெச்சிட்டு இருந்தேன். டமார்னு ஒரு சத்தம்தான். அந்த இடமே புகையாப் போச்சு. என் வாழ்க்கையும் அப்போதிருந்து இருட்டாப் போச்சு!" என்றவர், அடுத்த நொடியிலேயே நினைவலைகளால் கண் கலங்கிப்போனார். 

விஜயாவுக்கு வீடு கட்டிக்கொடுத்த நல் உள்ளங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close