காதலியின் விபரீத ஆசை... நடுரோட்டில் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்ட மாணவன் | Chennai youth wears burqa over lovers request

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (21/02/2019)

கடைசி தொடர்பு:21:10 (23/02/2019)

காதலியின் விபரீத ஆசை... நடுரோட்டில் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்ட மாணவன்

காதலியின் ஆசையால் சிக்கிய மாணவன்

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில், பர்தா அணிந்துகொண்டு நடந்துசென்ற மாணவரைப் பிடித்த பொதுமக்கள், போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில்... காதலியின் முத்தத்துக்காக பர்தா அணிந்துசென்றதாக மாணவர் கூறினார்.  

சென்னை பட்டாபிராமைச் சேர்ந்தவர் சக்திவேல். ஐடிஐ மாணவர். இவர், சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாணவியைக் காதலித்துள்ளார். காதலர் தினத்தையொட்டி, சக்திவேலும் அவரின் காதலியும் மெரினா கடற்கரையில் தனிமையில் சந்தித்தனர். அப்போது சக்திவேல், காதலியிடம் காதல் பரிசாக முத்தம் ஒன்றைக் கேட்டுள்ளார். அதற்குக் காதலி, `நான் முத்தம் கொடுக்க வேண்டும் என்றால், நீ பெண் வேடமிட்டு பர்தா அணிந்துகொண்டு தைரியமாக என் வீட்டிலிருந்து மெரினா கடற்கரைக்கு வரவேண்டும். அப்படி நீ வந்துவிட்டால், உன்னைக் கட்டிப்பிடித்து முத்தம் தருகிறேன்' என்று கூறியுள்ளார். 

காதல் ஜோடி

காதலியின் வார்த்தையை வேத வாக்காக ஏற்றுக்கொண்ட சக்திவேல், பர்தா அணிந்துகொண்டு மெரினா கடற்கரைக்குச் சென்றார். ஐஸ்ஹவுஸ்  பகுதியில் சக்திவேல் நடந்துசென்றபோது, அவரின் நடையைப்பார்த்த பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவ்வழியாகச் சென்ற பர்தா அணிந்த பெண்கள், சக்திவேலைக் கூர்ந்து கவனித்தனர். அப்போது, பர்தா அணிந்த அவர், ஆண்கள் அணியும் செருப்பை அணிந்திருந்தார். இதனால், பர்தா வேடமணிந்து செல்லும் நபர் பெண் இல்லை, திருடனாக இருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகித்தனர். உடனடியாக சக்திவேலை மடக்கி, பர்தாவை விலக்கிப்பார்த்தனர். அப்போது, உண்மை வெட்ட வெளிச்சமானது. பொதுமக்களிடம் சிக்கிய சக்திவேல், பர்தா அணிந்த விவரத்தை எடுத்துக்கூறினார். ஆனால் பொதுமக்கள், ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் சக்திவேலை ஒப்படைத்தனர். 

சக்திவேலின் வருகைக்காக அவரின் காதலி மெரினாவில் காத்திருந்தார். ஆனால், சக்திவேல் அங்கு வரவில்லை. இந்த நிலையில்தான் போலீஸார்  அந்தப் பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அவர், `நான்தான் விளையாட்டுக்காக அப்படிச் சொன்னேன்' என்று கூறியுள்ளார். சக்திவேலும் போலீஸாரிடம் காதலியின் முத்தத்துக்காகத்தான் பர்தா அணிந்து சென்றதாகக் கூறினார். இதையடுத்து, சக்திவேலையும் அவரின் காதலி, பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் நடந்த விவரத்தை போலீஸார் கூறினர். 

ஆத்திரமடைந்த சக்திவேலின் உறவினர்கள் அவருக்கு அறிவுரை கூறினர். இதையடுத்து, இருவரின் பெற்றோர்கள் வேண்டுகோளையும் ஏற்ற போலீஸார், காதலர்களை எச்சரித்து அனுப்பினர். 

காதலியின் முத்தத்துக்காக காதலன் பர்தா அணிந்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. காதல் விளையாட்டு விபரீதமானது. 


[X] Close

[X] Close