தமிழக அரசுக்கு ஆதரவாக ராமதாஸின் முதல் அறிக்கை! | PMK cadres should help people to get TN governments 2000 rupees special assistant, says Ramadoss

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (21/02/2019)

கடைசி தொடர்பு:17:00 (21/02/2019)

தமிழக அரசுக்கு ஆதரவாக ராமதாஸின் முதல் அறிக்கை!

``தமிழக அரசின் ரூ.2000 நிதியுதவி, அனைவருக்கும் கிடைக்க பா.ம.க-வினர் உதவ வேண்டும்'' என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி வைத்த பிறகு, தமிழக அரசுக்கு ஆதரவாக ராமதாஸ் வெளியிடும் முதல் அறிக்கை இது என்று கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியுடன் ராமதாஸ்

'தமிழ்நாட்டில் இரு திராவிடக் கட்சிகளோடும் கூட்டணி கிடையாது' என்று 2011-ம் ஆண்டு முதல் கூறிவந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், கடந்த 2016-ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்த ராமதாஸ், ஒரே ஒரு தொகுதியில் மட்டும், அதாவது அன்புமணி போட்டியிட்ட தருமபுரியில் வெற்றிபெற்றது பா.ம.க அதன் பின்னரும், யாருடனும் கூட்டணி இல்லை என்ற முழக்கத்துடன் பா.ம.க பயணித்துவந்தது. அ.தி.மு.க, மத்தியில் ஆளும் பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்துவந்த ராமதாஸ், திடீரென யாரும் எதிர்பாராத நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துவிட்டார். 7 தொகுதிகளில் அந்தக் கட்சி போட்டியிடுகிறது. "இது மக்கள்நலக் கூட்டணி" என்று பதில் அளித்துவிட்டு சென்றுவிட்டார் ராமதாஸ். அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி வைத்துக்கொண்டதற்கு, தற்போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்தச் சூழ்நிலையில், அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்குப் பிறகு, தமிழக அரசுக்கு ஆதரவாக முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் ராமதாஸ். "தமிழக அரசின் ரூ.2000 நிதியுதவி அனைவருக்கும் கிடைக்க உதவ வேண்டும்" என்று பா.ம.க-வினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் வறுமையில் வாடும் அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2000 நிதி வழங்கும் திட்டத்திற்கும், மத்திய அரசின் சார்பில் உழவர்களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கும் பயனாளிகளைப் பதிவுசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. எனினும், பல இடங்களில் இந்தப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

உழவர்களுக்கும், ஏழைகளுக்கும் குறைந்தபட்ச மாத வருமானம் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட நிழல் நிதிநிலை அறிக்கைகளிலும் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. உழவர்களுக்கு, ஏக்கருக்கு ரூ.10,000 மூலதன மானியம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க வலியுறுத்தியிருந்த நிலையில், சிறு, குறு விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதில் முதல்கட்டமாக, இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 உழவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

ராமதாஸ்

அதேபோல், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானமாக மாதம் ரூ.2500 வழங்க வேண்டும் என பா.ம.க வலியுறுத்தியிருந்த நிலையில், ஒருமுறை உதவியாக ரூ.2000 வழங்கப்படும் என முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். தேசிய அளவிலும், மாநில அளவிலும் இத்தகைய நிதியுதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டதில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள இத்திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள அனைவருக்கும் சென்றடையவேண்டியது மிகவும் முக்கியம். இரு திட்டங்களுக்கும் பயனாளிகளின் உத்தேசமான பட்டியலை தமிழக அரசு ஏற்கெனவே தயாரித்துவைத்திருக்கிறது. ஆனாலும், எவரும் விடுபட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன், புதிய பயனாளிகளும் இப்போது சேர்க்கப்பட்டுவருகின்றனர். இதுகுறித்த விவரங்கள் பல்வேறு வழிகளில் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து தரப்பினருக்கும் இதுகுறித்த விழிப்புஉணர்வு இல்லை என்பதாலும், விண்ணப்பங்களைப் பெறவேண்டிய அதிகாரிகள் வேறு பணிகள் காரணமாக அலுவலகத்துக்கு வெளியில் சென்று விடுவதாலும், ஏராளமான பயனாளிகளின் விவரங்கள் இன்னும் பதிவுசெய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

மத்திய அரசு வழங்கும் உழவர்களுக்கான ரூ.2,000 நிதி உதவி பெற, கிராம நிர்வாக அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், புகைப்படங்கள், நியாயவிலைக் கடைகள், சிட்டா நகல், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்கள், வங்கிக்கணக்கு விவரங்கள் ஆகியவற்றையும் வழங்க வேண்டும். அதேபோல், மாநில அரசு சார்பில் ஒரு முறை மட்டும் வழங்கப்பட உள்ள ரூ.2000 நிதி உதவி பெற விண்ணப்பப்படிவம் எதுவும் தாக்கல் செய்யத் தேவையில்லை. மாறாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோரின் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்கள், வங்கிக்கணக்கு விவரங்கள் ஆகியவற்றை ஊராட்சி செயலாளர்களிடம் வழங்கினால் போதுமானதாகும். இந்த விவரங்கள் தெரியாததால், பலர் மத்திய, மாநில அரசின் நிதியுதவி பெறுவதற்காகத் தங்களின் பெயர்களைப் பதிவுசெய்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களும், உழவர்களும் பயனடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட  மத்திய, மாநில அரசின் நிதியுதவித் திட்டங்களின் பயன்கள், தகுதியுடைய அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

ராமதாஸ் பேட்டி

அதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தங்கள் பகுதியிலுள்ள ஏழை எளிய அமைப்புசாரா தொழிலாளர்களையும், உழவர்களையும் அணுகி, மத்திய மாநில அரசுகளின் நிதியுதவி பெற விண்ணப்பித்துவிட்டார்களா என்பதை விசாரிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்காத ஏழைகள் மற்றும் உழவர்களுக்கு இத்திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்கள்குறித்து விளக்குவதுடன், தேவையான ஆவணங்களைத் திரட்டி, அவர்களின் பெயர்களைப் பதிவு செய்யவும் உதவ வேண்டும்.

இந்தத் திட்டங்களின்படி நிதியுதவி வழங்கும் பணி, வரும் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட உள்ளது. அதற்குள்ளாக வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களும், உழவர்களும் 100% இத்திட்டங்களுக்கு விண்ணப்பித்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். வறுமையை ஒழிப்பதற்கான இத்திட்டங்களின் பயன்களைத் தகுதியானவர்களுக்கு பெற்றுத்தருவதில் அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுடனும் ஒருங்கிணைந்து பா.ம.க நிர்வாகிகள் செயல்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


[X] Close

[X] Close