`அனைத்துக்கும் திங்கள்கிழமை பதில் தருவேன்! - அன்புமணி | Will answer your questions about ADMK alliance to Monday, says Anbumani Ramadoss

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (21/02/2019)

கடைசி தொடர்பு:19:45 (21/02/2019)

`அனைத்துக்கும் திங்கள்கிழமை பதில் தருவேன்! - அன்புமணி

அன்புமணி

அ.தி.மு.க., பா.ம.க கூட்டணி அமைந்த பிறகு, முதல் முறையாக இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலம் விமான நிலையம் வந்திருந்தார். அவரிடம் கூட்டணிகுறித்து பல கேள்விகளைக் கேட்பதற்காகப் பத்திரிகையாளர் முயன்றனர். ஆனால், அனைத்திற்கும் திங்கள்கிழமை பதில் சொல்வதாகக் கூறிவிட்டு அன்புமணி திரும்பிச் சென்றார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவரணிச் செயலாளர் கம்பை நல்லூர் முரளியின் தங்கை திருமண நிகழ்ச்சிக்காக அன்புமணியும், அவரது மனைவி செளமியாவும் சேலம் விமான நிலையத்தில் வந்திறங்கி, கார் மூலம் கம்பை நல்லூர் புறப்பட்டுச் செல்வதாகத் தகவல் வந்தது. அதையடுத்து, பத்திரிகையாளர்கள் விமான நிலையத்தில் குவிந்தார்கள்.

சேலம் 8 வழிச் சாலை போராட்டங்களுக்கு வந்த அன்புமணி, எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் ஒருமையில் திட்டியதோடு, அ.தி.மு.க அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேட்டியளித்தார். ``வரும் தேர்தலில் அ.தி.மு.க -வினர் யாரும் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள்'' என்று கடுமையாகச் சாடினார். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க கூட்டணிகுறித்து அன்புமணியிடம் விளக்கம் கேட்பதற்காக பத்திரிகையாளர்கள் முயன்றார்கள்.

அதற்குப் பதிலளித்த அன்புமணி, ''நீங்கள் என்ன கேட்க வறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்ந்தது முதற்கொண்டு அனைத்துக்கும் வரும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமாகப் பேசுகிறேன்'' என்று கூறிவிட்டுச் சென்றார்.  

 


[X] Close

[X] Close