சட்ட விரோதமாக ஆற்று மணல் அள்ளிய தனியார் குவாரிக்குத் தடை! - உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு | Madurai HC bench order to close Ramnad Sand quarry over illegal sand mining issue

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (21/02/2019)

கடைசி தொடர்பு:20:00 (21/02/2019)

சட்ட விரோதமாக ஆற்று மணல் அள்ளிய தனியார் குவாரிக்குத் தடை! - உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

கடலாடி அருகே உள்ள கடுகுச் சந்தைப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி செயல்படும் மணல் குவாரிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அனுமதி இன்றி இயங்கும் ஆற்று மணல் குவாரி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள  கடுகுச் சந்தைப் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ``ராமநாதபுரம் மாவட்டம் கடலாடிப் பகுதியில் உள்ள கடுகுச் சந்தை கிராம மக்கள் முழுமையாக விவசாயம் செய்து வருகின்றனர். இங்குள்ள கடுகுச் சந்தை கண்மாய் தண்ணீர் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது போதிய மழை இல்லாததால் கண்மாயில் நீரின்றி பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நிலத்தடிநீர் குறைந்து வருகிறது.

கடுகு சந்தை மணல் குவாரி 

இந்நிலையில், இந்தப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சவுடு மண் அள்ள மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுக்கொண்டு சட்ட விரோதமாக ஆற்று மணல் அள்ளி வருகின்றனர். இதற்காகப் பல மண் அள்ளும் இயந்திரங்களைப் பயன்படுத்தி தினந்தோறும் நூற்றுக்கணக்கான  லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் கண்மாய்  பெரும் பாதிப்புக்கு உள்ளாகி நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை நம்பி உள்ள எங்கள் வாழ்வாதாரம் பாதிப்படையும். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகள் காவல்துறையினரே மணல் கொள்ளையர்களுக்குத் துணையாக உள்ளனர். எனவே, நீதிமன்றம் இந்தச் சட்ட விரோத மணல் குவாரிக்குத் தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளிவருவதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மணல் குவாரி செயல்பட இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


[X] Close

[X] Close