பிளாஸ்டிக் ஒழிப்புக்காக பைக்கில் நின்றபடியே 10,000 கி.மீ பயணம்! - அசத்தும் திருப்பூர் பெண் | Tiruppur woman's plastic awareness bike rally reaches tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (21/02/2019)

கடைசி தொடர்பு:19:11 (21/02/2019)

பிளாஸ்டிக் ஒழிப்புக்காக பைக்கில் நின்றபடியே 10,000 கி.மீ பயணம்! - அசத்தும் திருப்பூர் பெண்

`பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தைப் படைப்போம்' என்பதை வலியுறுத்தி, பைக்கில்  நின்றபடி ஓட்டியவாறே பிரச்சார விழிப்பு உணர்வுப் பயணம் செய்துவரும் பெண், தஞ்சை வந்தார். அவருக்குப் பள்ளி  மாணவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்ததோடு, அவர்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்புகுறித்துப் பேசினார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்தவர் டெய்லர் சைபி மேத்யூ. இவர், பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க வலியுறுத்தியும், இயற்கை மற்றும் பெண்மையைக் காக்கும் நோக்கத்தோடும் டூ விலரில் 10 ஆயிரம் கி.மீ துாரம் நின்றபடி பயணம் செய்யும் சாகசத்தை கடந்த 3-ம் தேதி ஊட்டியில் தொடங்கினார். இன்று தஞ்சை வந்த அவர், அரசர்  மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பேசினார்.

இயற்கையை அழிக்கும், பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களை உண்ணக் கூடாது. பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்தாலே, 50 சதவிகித பிளாஸ்டிக் குப்பை காணாமல் போய்விடும். தமிழக அரசின் பிளாஸ்டிக் தடையை ஏற்று, பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தைப் படைக்க முயல்வோம்’’ என்றார். பின்னர்,  டூவீலரின் முகப்பில் `நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார பயணம்' என்ற பதாகையை வைத்துக்கொண்டும், பயணத்தின்போது அவருக்குத் தேவையான பொருள்களை வண்டியின் பின்பக்கம் வைத்துக்கொண்டும் பைக்கில் நின்றபடி பயணம்செய்தார். அப்போது, பள்ளி மாணவர்கள் அவரை கைதட்டி உற்சாகப்படுத்தினர். இதில், அந்தப் பள்ளியின்  தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவியர் எனப் பலர் கலந்துகொண்டனர். பின்னர், அரண்மனை சாலையில் பைக் ஓட்டியபடியே விழிப்புஉணர்வு ஏற்படுத்தினர்.

இதுகுறித்து சைபி மேத்யூ கூறியதாவது; சின்ன வயதிலிருந்தே பைக் மீது எனக்கு ரொம்ப ஆசை. என் பையன்தான் நின்னுகிட்டே பைக் ஓட்டுவதற்கு சொல்லிக்கொடுத்தான். கடந்த வருடம்,  250 கிலோமீட்டர்  நின்னுகிட்டே பைக் ஓட்டினேன். அதற்கு, வரவேற்பும் பாராட்டும் கிடைத்ததோடு, லிம்கா சாதனையிலும் இடம் பிடிச்சேன். இப்போது,  10,000 கிலோ மீட்டர்  நின்றபடி ஓட்டியே பிளாஸ்டிக், பெண்கள் பாதுகாப்புகுறித்து விழிப்பு உணர்வு செய்வதற்கான பயணத்தைத் தொடங்கி, பயணித்துவருகிறேன். தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில், இதுவரை 20 மாவட்டங்களுக்கு பிரசாரம் செய்து, 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துவிட்டேன். மேலும், விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வீதமாக 400 பள்ளி, கல்லுாரிகளில் பேசியுள்ளேன். மீதமுள்ள 13 மாவட்டங்களுக்கும் செல்கிறேன்'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close