`5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இந்த ஆண்டு கிடையாது!’ - அமைச்சர் செங்கோட்டையன் | No Public exams for 5th and 8th standard this year, says Minister Sengottaiyan

வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (21/02/2019)

கடைசி தொடர்பு:19:12 (21/02/2019)

`5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இந்த ஆண்டு கிடையாது!’ - அமைச்சர் செங்கோட்டையன்

`5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கிடையாது’ என ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

 

செங்கோட்டையன்

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு மசோதாவை தாக்கல் செய்தது. அதுமட்டுமின்றி, இந்த முடிவுகளை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என அறிவித்தது. மத்திய அரசின் இத்தகைய அறிவிப்பைக் கேட்டு பெற்றோர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். மத்திய அரசின் இந்த முடிவு குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதற்கிடையே, மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டே நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்தது. தமிழக அரசின் இத்தகைய முடிவிற்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதற்கிடையே, ஈரோட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறக்க வருவதையொட்டி, மேம்பாலப் பணிகளை ஆய்வுசெய்ய அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோர் இன்று ஈரோட்டிற்கு வருகை தந்தனர்.

மேம்பாலப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த செங்கோட்டையனிடம், '5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இருப்பது பல விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறதே' என பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ``5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதை அந்தந்த மாநிலங்களே முடிவுசெய்துகொள்ளலாம் என மத்திய அரசு கூறியிருக்கிறது. அதனடிப்படையில், இந்த ஆண்டு          5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கிடையாது’’ என்று கூறினார்.


[X] Close

[X] Close