``மீடியாக்களிடம் பேசக் கூடாது’ன்னு மிரட்டுறாங்க சார்!” - விஸ்வரூபம் எடுக்கும் ஹெச்.ஐ.வி விவகாரம் | Parents of alleged HIV got affected HIC virus, complaints against government officials

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (21/02/2019)

கடைசி தொடர்பு:20:30 (21/02/2019)

``மீடியாக்களிடம் பேசக் கூடாது’ன்னு மிரட்டுறாங்க சார்!” - விஸ்வரூபம் எடுக்கும் ஹெச்.ஐ.வி விவகாரம்

2 வயது குழந்தை ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட விவகாரம்

``நான் படிக்காதவன் சார்... பெருசா விவரம் தெரியாதவன், என் குழந்தையை கோயம்புத்தூர் ஜி.ஹெச்-ஐ தவிர வேற எங்கேயும் நான் காட்டல. ஆகையால் இங்கிருந்துதான் என் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பரவியிருக்கும்’னு புகார் சொன்னதுக்கு, இனிமேல் மீடியாக்களிடம் பேசக் கூடாது’ன்னு என்னை மிரட்டுறாங்க சார்... ” என்று அதிர வைத்துள்ளார் ஹெச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான 2 வயதுப் பெண் குழந்தையின் தந்தை விஸ்வநாதன். 

திருச்சியைச் சேர்ந்த விஸ்வநாதன்-சித்ரா தம்பதியின் 2 வயதுப் பெண் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பரவியிருக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. 6 மாதங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஸ்வநாதனின் குழந்தைக்கு, இதயக் கோளாறு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அப்போது,  குழந்தையின் உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாகச் சொல்லி ரத்தம் ஏற்றியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நடந்து ஆறு மாதம் கழித்து, அந்தக் குழந்தைக்கு உடலெங்கும் தடிப்புகளும், காதுகளுக்குப் பின்புறம் கட்டிகளும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அந்தக் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட விவகாரம்

ஆனால், குழந்தையின் பெற்றோருக்கும் அந்தக் குழந்தையோடு பிறந்த (இரட்டைக் குழந்தை) இன்னொரு ஆண் குழந்தைக்கும் ஹெச்.ஐ.வி இல்லாத சூழலில் பெண் குழந்தைக்கு மட்டும் ஹெச்.ஐ.வி தாக்கியது எப்படி என்று சர்ச்சை எழுந்தது. என் குழந்தையை நான் வேறு எங்கும் காட்டவில்லை. கோவை அரசு மருத்துவமனையில்தான் ரத்தம் ஏற்றினார்கள். அங்கிருந்துதான் என் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பரவியிருக்கும் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். ஆனால், கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகனோ இவர்களின் குற்றச்சாட்டை மறுத்தார். நாங்கள் ரத்த சிவப்பு அணுக்களே ஏற்றினோம். அதிலிருந்து ஹெச்.ஐ.வி பரவ வாய்ப்பில்லை. அந்தக் குழந்தைக்குச் செலுத்தப்பட்ட ரத்த மாதிரியையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டோம். அதில் ஹெச்.ஐ.வி இல்லை. வேறு எங்கேயாவது சிகிச்சை எடுத்திருப்பார்கள் அதன் மூலம் பரவியிருக்கலாம் என்றார் அவர்.

 இந்தச் சூழலில் இந்த விவகாரம் குறித்து ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தருமாறு கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு, சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் இன்று உத்தரவிட்டுள்ளார். இந்தப் பரபரப்பான சூழலில், இன்று மருத்துவமனையிலிருந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுப்பதற்காக குழந்தையோடு வந்தனர் விஸ்வநாதனும் சித்ராவும், அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய விஸ்வநாதன், ``இங்கே என் குழந்தைக்கு ஹெச்.ஐ.விக்கான முறையான ட்ரீட்மென்டே கொடுக்க மாட்டேங்குறாங்க. அதனால, குழந்தையைத் தூக்கிட்டு வந்துட்டோம். நான் படிக்காதவன் சார்...  எனக்குப் பெருசா விவரம் தெரியாது, இங்கிருந்துதான் ஹெச்.ஐ.வி பரவியிருக்குன்னு மீடியாக்களிடம் பேசக் கூடாதுன்னு சொல்லி மிரட்டுறாங்க. என் குழந்தையை நான் வேற எங்கேயும் காட்டலை சார். இங்கதான் காட்டினேன். என் குழந்தைக்கு முறையான ட்ரீட்மென்ட் கொடுத்தா போதும் சார் ”என்றார்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close