`சிறப்பு நிதி ரூ.2,000 வேண்டாம்; தகுதியானவர்களுக்குக் கொடுங்க!’ - மனு கொடுத்த விவசாயிகள் | We don't need government's special assistant 2,000 rupees, Tanjore farmers gives petition to officials

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (21/02/2019)

கடைசி தொடர்பு:21:00 (21/02/2019)

`சிறப்பு நிதி ரூ.2,000 வேண்டாம்; தகுதியானவர்களுக்குக் கொடுங்க!’ - மனு கொடுத்த விவசாயிகள்

அரசு வழங்கும் சிறப்பு நிதி ரூ 2,000 வேண்டாம் என்றும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் பட்டியலில் தங்களது பெயரை நீக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அந்த நிதியைத் தர வேண்டும் என மூன்று விவசாயிகள்,  தஞ்சாவூரில் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம்  மனு அளித்துள்ளனர். அதிகாரிகள் அவர்களைப் பாராட்டவும் செய்தனர்.

தமிழக முதல்வர் பழனிசாமி, கடந்த 11-ம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் பட்டியலைத் தயார்செய்துவருகிறது. தமிழக அரசு, கடந்த 2004-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி அதில் தகுதியானவர்கள் எத்தனை பேர், இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் எத்தனை பேர் எனக் கணக்கீடு செய்து, இந்தப் பட்டியலைத் தயார்செய்கிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள  பட்டியலில் இடம் பெற்றால் மட்டுமே இந்த நிதி வழங்கப்படும் என்பதால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர்  நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது பெயரை சேர்க்கக் கோரி விண்ணப்பங்களை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு கடந்த 2004-ம் ஆண்டு தயாரித்த வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் பட்டியலில் தங்களது பெயர்கள் இடம்பெற்றுள்ளது, அவற்றை நீக்க வேண்டும் என தஞ்சாவூர் அருகே உள்ள  பூதலுாரை அடுத்த புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குறு விவசாயிகள் மலர்கொடி இளங்கோவன், தனலட்சுமி பாலசுப்பிரமணியன், ரேணுகாதேவி முத்தமிழ்செல்வன் ஆகியோர் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த அறிவழகன் உதவியோடு பூதலுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் காந்தரூபனிடம் இதற்கான மனுக்களை வழங்கினர்.

இதுகுறித்து விவசாயி அறிவழகன் கூறியதாவது: ''என் உடன் பிறந்தவர்கள் 9 பேர். அனைவரும் ஒரே ஊரில் வசித்துவருகிறோம். சிலர் கூட்டுக் குடும்பமாகவும் உள்ளோம். தற்போது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் பட்டியலில் எங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததை அறிந்தோம். எனவே, அந்தப் பட்டியலில் இருந்து எங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். தற்போது, தமிழக அரசு வழங்குவதாகக் கூறியுள்ள ஒருமுறை நிதியான 2 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு வேண்டாம், அந்த நிதியை உண்மையிலேயே தகுதியானவர்களுக்கு வழங்குங்கள்'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close