அமைச்சர் செங்கோட்டையனின் உறவினர் எனச் சொல்லி பல கோடி ரூபாய் மோசடி! - கோவை போலீஸில் புகார் | People files police complaint against fraudulent finance company

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (21/02/2019)

கடைசி தொடர்பு:21:30 (21/02/2019)

அமைச்சர் செங்கோட்டையனின் உறவினர் எனச் சொல்லி பல கோடி ரூபாய் மோசடி! - கோவை போலீஸில் புகார்

அமைச்சர் செங்கோட்டையனின் உறவினர் என்று கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள்மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அமைச்சர் செங்கோட்டையன்

கோவை காந்திபுரம் பகுதியில் 'முல்லை' என்ற நிதி நிறுவனம் இயங்கிவந்தது. கோபியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்த இந்த நிறுவனம், `ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால், மூன்று மாதங்களில் 20 சதவிகிதம் வட்டியுடன் திருப்பித் தருகிறோம்’ என்று பிரசாரம் செய்தது. இதை நம்பி ஏராளமான மக்கள் அந்த நிறுவனத்திடம் பணத்தைக் கொட்டினர். ஆனால், அந்த நிறுவனம், பணத்தைச் சுருட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றிவிட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.

குறிஞ்சி

``அமைச்சர் செங்கோட்டையனின் உறவினர்  என்று கூறி விளம்பரம் செய்ததால்தான் நாங்கள் பணத்தை டெபாசிட் செய்தோம். தனியார் தொலைக்காட்சியில், செங்கோட்டையன் இந்த நிறுவனத்தைத் திறந்துவைக்கும் விளம்பரத்தை ஒளிபரப்பிவந்தார்கள். இதை நம்பி,           50 ஆயிரம் முதல் மூன்று லட்சம் வரை வங்கியில் செலுத்தினோம். ஆனால், லாபத் தொகையும் கொடுக்கவில்லை, எங்களது அசலையும் கொடுக்கவில்லை. 7 மாதங்களில் பணத்தைத் தருவதாக முல்லை நிறுவனத்தின் உரிமையாளர் குறிஞ்சி வாக்குறுதிகொடுத்தார். அந்த வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை. தற்போது, குறிஞ்சி மற்றும் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள், ஊழியர்கள் என்று அனைவரும் எஸ்கேப் ஆகிவிட்டனர்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் அந்த நிறுவனத்தில் பணம் கட்டியுள்ளோம். இதுதொடர்பாகப் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால்தான், தற்போது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். எப்படியாவது அவர்களிடமிருந்து எங்களது பணத்தை வாங்கித் தரவேண்டும்” என்றனர்.

 


[X] Close

[X] Close