பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்; நாற்பதுக்கு நாற்பது இலக்கு!’ - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் | Avoid Birthday Celebration our target is 40 out of 40: MKStalin

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (21/02/2019)

கடைசி தொடர்பு:22:30 (21/02/2019)

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்; நாற்பதுக்கு நாற்பது இலக்கு!’ - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

'நாடாளுமன்றத் தேர்தலில் ‘நாற்பதுக்கு நாற்பது’ என்ற வெற்றிக்கனியைக் கொடுப்பதே நீங்கள் எனக்கு அளிக்கும் பரிசாகும்' என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது முகநூல் பக்கத்தில், ‘ உங்கள் கனவுகளையும், புதுமையான எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பகிர்ந்துகொண்டு, எங்களோடு கரம் கோக்க வாருங்கள் எனப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்திடுமாறு கட்சித் தொண்டர்களுக்குத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தி.மு.க - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பிறகு நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது, “உங்கள் பிறந்தநாளில் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை வெளியாகுமா”எனக் கேட்டார்கள். அப்போதே, “என் பிறந்தநாளைக் கொண்டாடும் மன உணர்வில் நான் இல்லை” என்பதைத் தெரிவித்தேன். மார்ச் 1-ம் நாள் என்னுடைய பிறந்தநாள் என்றபோதும், தலைவர் நம்முடன் இல்லாத நிலையில், பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை என்பதே இப்போது என் எண்ணம். 

ஸ்டாலின்

ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் முதல் நிகழ்வாக, தலைவரும் தந்தையுமான கலைஞர் அவர்களிடமும், அன்னையார் தயாளு அம்மையாரிடமும் தாள் வணங்கி வாழ்த்துப் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு தலைவரின் வாழ்த்துகளை நேரில் பெற முடியாதபடி, இயற்கையின் சதி அமைந்துவிட்ட நிலையில், பிறந்தநாள் நிகழ்ச்சிகள் அவசியமற்றவை என்பதே என் முடிவு. வழக்கமாக மார்ச் 1 அன்று நேரில் சந்தித்து வாழ்த்தும் கழகத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், சிற்றூர், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், இந்த முறை அதனைத் தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பிறந்தநாள் விழா எனும் பெயரில் ஆடம்பர விழாக்களை நடத்துவதைக் கைவிட்டு, ஏழை - எளிய மக்கள் பயன்பெறும் வகையிலான நலத்திட்ட உதவிகளை இயன்றவரை வழங்கிட வேண்டுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக் கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள வலிமையான கூட்டணி, எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிபெறும் வகையில், மாற்றாரும் மலைத்திடும் வண்ணம், இப்போதிருந்தே கண்ணயராமல் களப்பணியாற்றுவதே கழக உடன்பிறப்புகள் எனக்குப் பிறந்தநாளில் உவந்து அளித்திடும் உயர்வான பரிசாகும். உன்னதமான அந்த உழைப்பு தரப்போகும் “நாற்பதுக்கு நாற்பது” என்ற வெற்றிக்கனியை, தலைவர் கலைஞர் அவர்களின் உயிர்த்துடிப்பான நினைவுகளுக்குப் பணிவோடு காணிக்கையாக்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
 


[X] Close

[X] Close