பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி சேர்ந்திருப்பது தற்கொலைக்குச் சமம்! - கோவை ராமகிருஷ்ணன் | ADMK - BJP alliance will face defeat in Parliament election, says Covai Ramakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 22:22 (21/02/2019)

கடைசி தொடர்பு:22:22 (21/02/2019)

பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி சேர்ந்திருப்பது தற்கொலைக்குச் சமம்! - கோவை ராமகிருஷ்ணன்

புத்தகம் அறிமுகம் விழா

``5 ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவதாகச் செய்தி வந்துள்ளது. இது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகம் ஆகும்" என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

 கரூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்ட எரிப்பு நூல்- 1957 ன் அறிமுக விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன், சாமானிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கோவை ராமகிருஷ்ணன்.

கோவை ராமகிருஷ்ணன்

அப்போது அவர் கூறுகையில், ``5 ம் மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவதாகச் செய்தி வந்துள்ளது. இது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகும். அவ்வாறு தமிழகத்தில் ஆளும் ஓ.பி.எஸ், ஈ,பி,எஸ் அரசு மேற்கொண்டால், ஏழை நடுத்தர கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவர். உயர் சமூகத்தினரின் உதவியோடு மீண்டும் தமிழகத்தில் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவர தமிழக அரசு முயற்சி செய்கிறது. இதை தமிழ் மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, இதை வலியுறுத்தி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களை வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.

மேலும், பா,ஜ,க, அ,தி,மு,க கூட்டணி குறித்து கேட்கிறீர்கள், வரும் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.கவுடன் கூட்டு சேர்ந்திருப்பது தற்கொலைக்குச் சமமானது. கடந்த 5 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, நீட்தேர்வு உள்ளிட்டவற்றை தமிழகத்தில் புகுத்தி, சிறு தொழில் மற்றும் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்பட காரணமாக இருந்திருக்கிறது. அத்தகைய மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டு சேர்ந்தால், அது தற்கொலைக்குச் சமமானதாக இருக்கும்.

கடந்த முறை 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 தொகுதிகளை வென்ற அ.தி.மு.க அரசு, தற்போது 20 தொகுதிகளில் பாரதிய ஜனதாவுடன் விட்டுக்கொடுத்து கூட்டுச் சேர்ந்து இருப்பது மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்டது என்பதையே காட்டுகின்றது. அ.தி.மு.க போட்டியிடும் 20 தொகுதிகளையும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால், நிச்சயம் தோல்வியைத் தழுவும் நிலையே ஏற்படும்" என்றார்.


[X] Close

[X] Close