`வேலூர் நில விவகாரத்தில் ஓ.பி.எஸ் நண்பரை நெருங்காதது ஏன்?’ - சந்தேகம் கிளப்பும் எதிர்த்தரப்பு | Real estate peoples raises questions over Vellore IT raid

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (21/02/2019)

கடைசி தொடர்பு:23:00 (21/02/2019)

`வேலூர் நில விவகாரத்தில் ஓ.பி.எஸ் நண்பரை நெருங்காதது ஏன்?’ - சந்தேகம் கிளப்பும் எதிர்த்தரப்பு

வேலூரில் ரூ.300 கோடி நில விவகாரம் தொடர்பாக, அமைச்சர் வீரமணி மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாகச் சோதனை செய்தனர். ஆனால், நிலத்தை உரிமை கொண்டாடும் முதல் நபரான ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பர் சேகர்ரெட்டியை வருமானவரித் துறையினர் நெருங்காதது குறித்து கேள்வி எழுந்திருக்கிறது. 

ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பர் சேகர்ரெட்டி

வேலூரில் உள்ள பிரச்னைக்குரிய ரூ.300 கோடி நில விவகாரம், விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பரும் தொழிலதிபருமான சேகர்ரெட்டி மற்றும் அமைச்சர் கே.சி.வீரமணி, ஆந்திராவைச் சேர்ந்த பால் நிறுவன உரிமையாளர்கள் பிரம்மானந்தம் தண்டா, சத்திய நாராயணா ஆகியோர் ஒருத்தரப்பினராக உள்ளனர். காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் எதிர் தரப்பினராக உள்ளனர். இவ்வளவு பெரிய தொகை கைமாறிய இந்த நில விவகாரம் தொடர்பாக, காட்பாடியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் இருவரின் வீடுகள் மற்றும் வேலூரில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் இன்று அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

அதேபோல், ஜோலார்பேட்டையில் உள்ள அமைச்சர் வீரமணியின் வீடு, திருமண மண்டபம் உட்பட பல்வேறு இடங்களிலும், ஆந்திராவைச் சேர்ந்த பால் நிறுவன உரிமையாளர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். ஆனால், பிரச்னைக்குரிய அந்த நிலத்தை முழுமையாக உரிமை கொண்டாடும் தொழிலதிபர் சேகர்ரெட்டியை வருமானவரித் துறை அதிகாரிகள் நெருங்கவில்லை. இந்த நில விவகாரத்தில், சேகர்ரெட்டியைத் தவிர்த்து மற்ற அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. வருமானவரித் துறையினரின் இந்த நடவடிக்கை, சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் தரப்பில் கருதுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ``நில விவகாரத்தில் தொழிலதிபர் சேகர்ரெட்டிதான் முதல் நபர். இது சம்பந்தமாக ஒவ்வொரு முறையும் பிரச்னை ஏற்படும்போது, சேகர்ரெட்டியின் ஆதரவாளர்கள் ரிஷிகுமார், பரசுராமன் மற்றும் அமைச்சர் வீரமணியின் உதவியாளர் புகழேந்தி ஆகியோர்தான் வருவார்கள். சேகர்ரெட்டி மற்றும் அவர் தொடர்புடைய ஒருவரிடமும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தாதது, சந்தேகத்திற்கு வலுசேர்த்திருக்கிறது’’ என்றனர்.


[X] Close

[X] Close