`முகிலன் குறித்து தமிழக அரசு மௌனம் சாதிப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது!’ - திருமுருகன் காந்தி | Thirumurugan gandhi question TN government's silence over Activist Mukilan's missing issue

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (22/02/2019)

கடைசி தொடர்பு:07:55 (22/02/2019)

`முகிலன் குறித்து தமிழக அரசு மௌனம் சாதிப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது!’ - திருமுருகன் காந்தி

`தமிழகத்தில், சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கக் குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் எங்கு இருக்கிறார் என்பதுகுறித்து தமிழக அரசு மௌனம் சாதிப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது’ என்று கரூரில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

அந்த விழா 

கரூரில், 'வீரத்தமிழர் மக்கள் முன்னேற்றக் கழகம்' எனும் புதிய கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வீரமங்கேஸ்கர் என்கிற சித்தார்த் தலைமைதாங்கினார். இந்நிகழ்ச்சியில்,சிறப்பு அழைப்பாளராக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருஷ்ணன், ஆதித்தமிழர் மக்கள் முன்னேற்றக் கழக மாநில துணைச்செயலாளர் கராத்தே வீரர் முருகன், சாமானிய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அக்னி. இல அகரமுத்து, பாரதத்தாய் அமைப்புசாரா மற்றும் கட்டுமான அனைத்து தொழிலாளர் நலச் சங்க மாநில பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக்  கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

 பின்னர், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளரிடம் கூறுகையில், ``1957-ம் ஆண்டு, தந்தை பெரியார் அவர்களால் சாதியைப் பாதுகாக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்த பிரிவை அகற்றக் கோரி நடைபெற்ற அரசியலமைப்பு எரிக்கும் போராட்டத்தில், பல்வேறு அரிய தகவல்களை விவரிக்கும் நூலாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு எதிராகக் கொக்கரிக்கும் சக்திகளின் முதுகெலும்பை நொறுக்கிப்போடும் உத்வேகத்தை இந்த நூல் தருகிறது. தமிழக மக்களைத் துண்டாடப் பார்க்கும், மத போர்வையில், சாதிய வடிவில் கலவரத்தைத் தூண்டி,பிரச்னைகளை ஏற்படுத்தப் பார்க்கும் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி,பா.ஜ.க,ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களுக்கு எதிராக நாம் போராடும் வடிவத்தை இந்த நூல் தருகிறது.

அதற்காக, இந்த நூலை தமிழகத்தின் மூலை முடுக்குக்கெல்லாம் கொண்டுபோக வேண்டும். நாம் போராடும் வலிமையை ஏற்படுத்த வேண்டும். மத்தியில் காங்கிரஸ் இருந்தபோது செய்த அதே தவற்றை இப்போது பா.ஜ.க-வும் செய்தது. அதனால், காங்கிரஸ், பா.ஜ.க என்ற இருஅணிகளும் நமக்குத் தேவையில்லை. அவர்கள் தமிழகத்தில் ஆணியே பிடுங்க வேண்டாம்.

தமிழகத்தை ஆளும் உரிமையை பிராந்தியக் கட்சிகளே பார்த்துக்கொள்ளும். இப்போது அமைந்திருக்கும் கூட்டணிகள், தமிழர்களுக்கு விரோதமான கூட்டணிகள். மேலும், தமிழகத்தில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன், எங்கு இருக்கிறார் என்பதுகுறித்து தமிழக அரசு மௌனம் சாதிக்கிறது. இது, பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர் நிலைமை என்ன என்பதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்" என்றார்.


 


[X] Close

[X] Close