`அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மக்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டணி!’ - தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் | Desiya uzhavar uzhaipalar kazhagamslams ADMK - BJP alliance

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/02/2019)

கடைசி தொடர்பு:07:15 (22/02/2019)

`அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மக்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டணி!’ - தேசிய உழவர் உழைப்பாளர் கழகம்

``வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறோம்" என்று கரூரில் நடைபெற்ற தேசிய உழவர் உழைப்பாளர் கழக செயல்வீரர்கள் கூட்டத்தில், அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோதிகுமார் தெரிவித்தார்.

செயல்வீரர்கள் கூட்டம் 

அக்கட்சியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜோதிகுமார் தலைமையில் நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிகுமார், ``விவசாயத் தொழிலாளர்களின் நலன் காக்கவும், கூலித் தொழிலாளர்களின் நலன் காக்கவும் தனித்துப் போட்டியிட முடிவு செய்யபட்டுள்ளது. தொழிலாளர்களுக்காக பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் புறக்கணித்துவிட்டன. வரும் மார்ச் 24-ம் தேதி கரூரில் தேர்தல் விழிப்பு உணர்வு மாநாடு நடைபெறும். அ.தி.மு.க,பா,ஜ,க கூட்டணி என்பது மக்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டணி.

ஜோதிகுமார் பேட்டி

எங்கள் கட்சி வெற்றி பெற்றால், நொய்யல் ஆற்றில் உள்ள கழிவுகளை தூய்மைப்படுத்துவோம். காவிரி ஆற்றில் தேவையான இடங்களில் தடுப்பணைகளைக் அமைப்போம். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தற்போது மூடப்பட்டுள்ளது. மீண்டும் அதைத் திறப்பதற்கான முயற்சியில் ஆளும் வர்க்கம் ஈடுபடும். ஒருபுறம் பதவி மூப்பு அடிப்படையிலான வேலைவாய்ப்பை ரத்து செய்துவிட்டு, நீட் தேர்வு மூலம் மாணவர்களை வஞ்சிக்கிறது அரசு. 5 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு, தற்பொழுது விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் ஆதாயத்துக்காகதான்.

விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ளாத இந்த ஆளும் அரசுகள் அகற்றப்பட வேண்டும். விவசாயத்துக்கு நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய ஆறுகளில் சாயக் கழிவுகளை கலந்துவிட்டு, இந்த அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது. எனவே, விவசாயிகளின் நலன் காக்க 7 ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறோம். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரானது கேரளாவுக்குச் சென்று கடலில் வீணாகக் கலக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றபிறகு, அதை தடுப்போம்" எனக் கூறினார்.


[X] Close

[X] Close