`அவங்கள உடனே மாத்துங்க' - புதுக்கோட்டையில் தலைமையாசிரியைக்கு எதிராகக் களமிறங்கிய பெற்றோர்கள்! | Parents struggle with students for transfer the headmaster

வெளியிடப்பட்ட நேரம்: 07:59 (22/02/2019)

கடைசி தொடர்பு:07:59 (22/02/2019)

`அவங்கள உடனே மாத்துங்க' - புதுக்கோட்டையில் தலைமையாசிரியைக்கு எதிராகக் களமிறங்கிய பெற்றோர்கள்!

புதுக்கோட்டை அருகே பனங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியையை உடனடியாக பணி மாற்றம் செய்யக்கோரி பள்ளி முன்பு மாணவர்களுடன் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெற்றோர்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே பனங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பனங்குளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு தலைமையாசிரியையாக ஜோதி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், முறையாகப் பள்ளிக்கு வருவதில்லை எனவும், அப்படியே பள்ளிக்கு வந்தாலும், பள்ளி பணிகளை முறையாகக் கவனிப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், மாணவர்களை அடிக்கடி இழிவாகப் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆசிரியையின் நடவடிக்கை குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்றனர். அங்கு பள்ளி வகுப்புக்குள் சென்று, பள்ளி பணியை கவனிக்காத தலைமையாசிரியை உடனடியாக பணி மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பெற்றோர்கள்

தொடர்ந்து, மாணவர்களை வெளியில் அழைத்து வந்து பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் தலைமையாசிரியை பணி மாற்றம் செய்யப்படுவார் என்று உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர். பள்ளி தலைமையாசிரியயைக் கண்டித்து பள்ளிக்கு உள்ளே பெற்றோர்கள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


[X] Close

[X] Close