`அரண்மனையின் இதயத்துடிப்பை மீண்டும் இயக்கியுள்ளோம்' - பத்மநாபபுரத்தில் கேரள அமைச்சர் பெருமிதம்! | Padmanapapuram palace clock again working after 37 years

வெளியிடப்பட்ட நேரம்: 08:27 (22/02/2019)

கடைசி தொடர்பு:08:27 (22/02/2019)

`அரண்மனையின் இதயத்துடிப்பை மீண்டும் இயக்கியுள்ளோம்' - பத்மநாபபுரத்தில் கேரள அமைச்சர் பெருமிதம்!

பத்மநாபபுரம் அரண்மனையில் கடந்த 37 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த `நாளிகா மணி' இன்று முதல் ஒலித்துள்ளது. அரண்மனையின் இதயத்துடிப்பான மணியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக இந்த அரசு தனிக்கவனம் செலுத்தியது எனக் கேரள அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கடனப்பள்ளி ராமச்சந்திரன்

இந்திய சுதந்திரத்துக்கு முன்பு நடந்த மன்னர் ஆட்சியில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குத் தலைநகராக விளங்கியது கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அமைந்துள்ள பத்மநாபபுரம் அரண்மனை. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த அரண்மனை கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தில் இணைந்த பிறகு கேரளா அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பழைமை வாய்ந்த அரண்மனையின் கலை நயம் மிக்க கட்டட அமைப்புகள் மற்றும் மன்னர் காலத்தில் பயன்படுத்திய கருவிகள் அமைந்துள்ளன.

பத்மனாபபுரம் அரண்மனை

இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இந்த அரண்மனைக்கு வந்து செல்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபை பழைமையான பத்மநாபபுரம் அரண்மனையை புராதன சின்னமாக அங்கீகரிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னோட்டமாகப் பல புனரமைப்பு பணிகள் நடந்துவருகின்றன. அதன் ஒருபகுதியாக 200 ஆண்டுகளுக்கு முந்தைய நேரத்தை அறிவிக்கும் `நாளிகா மணி' புதுப்பிக்கப்பட்டு ஒலிக்கப்பட்டது. கடந்த 37 ஆண்டுகளாக இந்த மணி பழுதடைந்து காணப்பட்டது. அந்த கடிகாரம் சீரமைக்கப்பட்டதுடன் மாற்றுத்திறனாளிகள் அரண்மனையின் அழகைக் கண்டுகழிக்கும் விதமாக ஒலி, ஒளி.காட்சிக்கூடமும் இன்று திறக்கப்பட்டது.

ராமச்சந்திரன்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேரளா தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் பேசுகையில், ``கேரள அரசு 1000 நாள்களைக் கடந்து நல்லாட்சி புரிகிறது. இந்த 1000 நாள்களில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு மூன்று கோடியே முப்பது லட்சம் ரூபாய் செலவில் பணி செய்துள்ளோம். கடந்த 37 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த `நாளிகா மணி" இன்று முதல் ஒலித்துள்ளது. அரண்மனையின் இதயத்துடிப்பான மணியை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்காக இந்த அரசு தனிக்கவனம் செலுத்தியது. மாற்றுத்திறனாளிகள் அரண்மனை படிகளில் ஏறிச்சென்று பார்க்க இயலாத நிலை இருப்பதால் அரண்மனையின் முழு வீடியோ ஒளிபரப்பப்படுகிறது. மேலும் ஊட்டுபுரை, பால்புரை சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பாரம்பர்யத்தைப் பாதுகாக்கும் வகையில் சீரமைப்புப்பணிகள் நடைபெறும்" என்றார்.


[X] Close

[X] Close