`உடைந்த குடிநீர்க் குழாயைச் சரி செய்யுங்க!’ - ஆணையரிடம் மனுக்கொடுத்த யு.கே.ஜி மாணவர் | UKG student who Gave Complaint to the commissioner to correct the broken water line

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (22/02/2019)

கடைசி தொடர்பு:10:40 (22/02/2019)

`உடைந்த குடிநீர்க் குழாயைச் சரி செய்யுங்க!’ - ஆணையரிடம் மனுக்கொடுத்த யு.கே.ஜி மாணவர்

குடிநீர் தேவை, தண்ணீர் சிக்கனம் அவசியம் குறித்தும் பள்ளியில் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், பள்ளியின் வாசல் முன்பு தண்ணீர்க் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது. அதைக் கொஞ்சம் சரி பண்ணுங்க சார் என யு.கே.ஜி மாணவர் ஒருவர், நகராட்சி ஆணையரிடம் மனுக்கொடுத்துள்ளார்.

மாணவன்

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள சவுடாம்பிகா கல்வி குழுமத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளியில் யு.கே.ஜி படிக்கிறார் சியாம் கிருஷ்ணா. இவர் துறையூர் நகராட்சி ஆணையர் நவேந்திரனிடம் குடிநீர் உடைப்பைச் சரி செய்யக் கோரி மனு எழுதிக் கொடுத்தார்.

அந்த மனுவில், `` எங்கள் பள்ளியில் குடிநீர்த் தேவையும் தண்ணீர் சிக்கனம் அவசியம் குறித்தும் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், பள்ளியின் முன்பு தண்ணீர் குழாய் உடைந்ததால், தினமும் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக யாரும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், தற்போது கோடைக்காலம் என்பதால் இந்தப் பகுதியில் வறட்சி நிலவுகிறது. ஆனாலும் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. எனவே, உடனடியாக எங்கள் பள்ளியின் முன்பு உள்ள தெருவில் உடைந்த குழாயை சரி செய்து தண்ணீர் வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என என் சார்பாகவும் என் பள்ளி நண்பர்கள் சார்பாகவும் உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்யாம் கிருஷ்ணா

யு.கே.ஜி படிக்கும் 4 வயது மாணவன் சியாம் கிருஷ்ணா குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதைப் பள்ளிக்கு வரும்போது கவனித்து, குழாய் உடைப்பு காரணமாக தண்ணீர் வீணாகி சாக்கடையில் கலக்கும் தண்ணீரைக் கண்டு வேதனையடைந்துள்ளார். இதையடுத்து சியாம் கிருஷ்ணா, துறையூர் நகராட்சி ஆணையர் நவேந்திரனிடம் குடிநீர் உடைப்பைச் சரி செய்யக் கோரி மனு எழுதிக் கொடுத்தார். மனுவைப் படித்துப் பார்த்த ஆணையர் உடனடியாக தமிழ்நாடு குடிநீர் வாரியம் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

சியாம் கிருஷ்ணா நம்மிடம், ``பள்ளிக் கூடத்தில் டீச்சர்ஸ் தண்ணீரை வீணாக்கக்கூடாது என சொல்லிக் கொடுத்தாங்க. ஆனால், பள்ளிக் கூட வாசலில் இவ்வளவு தண்ணீர் வீணாப் போவதை பார்க்கும்போது மனசு கஸ்டமாக இருந்துச்சு. இதைத் தடுக்க வேண்டுமென்று அப்பாக்கிட்ட கேட்டேன். அவங்க சொல்லச் சொல்ல அப்படியே மனுவா எழுதிக் கொடுத்துள்ளேன்.  என் மனுவை வாங்கிக்கொண்ட அந்த அங்கிள் என்னைப் பாராட்டியதுடன், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள்” என்றார் மழலைத்தமிழில். தண்ணீர் வீணாவதை தடுக்கக் கோரிய 4 வயது மாணவன் ஷியாம் கிருஷ்ணாவைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close