ராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்!- மோகன் குமாரமங்கலம் | People do not want Modi to become PM again says Mohan Kumaramangam

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (22/02/2019)

கடைசி தொடர்பு:13:40 (22/02/2019)

ராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்!- மோகன் குமாரமங்கலம்

மோடி

``அ.தி.மு.க., பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அக்கட்சியை விட்டு பலரும் வெளியே வருவார்கள்'' என  முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகனும், காங்கிரஸ் மாநிலச் செயல் தலைவருமான மோகன் குமாரமங்கலம் கூறினார்.

சேலத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``முதலில் என்னைக் காங்கிரஸ் மாநில செயல் தலைவராக நியமித்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குக் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தியும் பிரியங்கா காந்தியையும் அழைத்திருக்கிறோம். நிச்சயம் வருவார்கள். தமிழக மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

அ.தி.மு.க., பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் இந்தக் கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கூட்டணி சேருவதற்கு முன்பு வரை அந்தக் கட்சித் தலைவர்களையும், ஆட்சியையும் விமர்சனம் செய்துவிட்டு அவர்களோடு கூட்டணி சேர்ந்ததை மக்கள் விரும்பவில்லை. பா.ம.க-வை விட்டு மாநில மகளிர் அணி நிர்வாகி ராஜேஸ்வரி ப்ரியா வெளியே வந்திருக்கிறார். இன்னும் அக்கட்சியை விட்டு  பலரும் வெளியே வருவார்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு காங்கிரஸ்காரர்களின் லட்சியம்.

கடந்த 5 ஆண்டுகளாக மோடியின் பா.ஜ.க மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. வருடம் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக தேர்தல் பிரசாரத்தில் கூறினார்கள். அதை நிறைவேற்றவில்லை. குஜராத்தில் பட்டேலுக்கு 3,000 கோடியில் சிலை வைக்கிறார். தமிழக புயல் பாதிப்புக்குக் 300 கோடிகூடத் தரவில்லை. பா.ஜ.க அரசாங்கத்துக்கு பெட்ரோல், டீசல் விற்பனையில் மட்டும் 13 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. அந்தப் பணம் எங்கே போனது என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். பண மதிப்பு இழப்பு மூலம் சட்டசபையில் அமைச்சரே அதிகார பூர்வமாக 50,000 சிறு குறு தொழில்களும், 50 லட்சம் வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே தமிழகத்துக்கு நீட் விலக்கு அளித்திருந்தோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விவசாயிகள், மாணவர்கள் பிரச்னையை முன் வைத்து பிரசாரம் செய்வோம். மோடி மீண்டும் பிரதமர் ஆவதை மக்கள் யாரும் விரும்பவில்லை. அதனால் தி.மு.க கூட்டணி 40 தொகுதியிலும் அமோக வெற்றி பெரும். நாங்கள் தி.மு.க கூட்டணியில் கொங்கு மண்டலத்தில் 3 சீட் கேட்டிருக்கிறோம். அதில் சேலம் நாடாளுமன்றத் தொகுதியும் கேட்டிருக்கிறோம். காங்கிரஸ் தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அவர் நிச்சயம் சேலத்தில் வெற்றி பெறுவார்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close