பேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்! | arputhammal shares perarivalans old photos for release

வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (22/02/2019)

கடைசி தொடர்பு:13:09 (22/02/2019)

பேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்!

`பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம்' என்று நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்து ஆறு மாதம் முடியப்போகிறது. ஆனால், இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர். சட்டப்பேரவை தீர்மானம், அமைச்சரவை முடிவு, அனைத்துக் கட்சிகளின் குரல், தமிழக மக்களின் குரல் என எதையும் கண்டுகொள்ளாமல் விடுதலை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் கையெழுத்திட்டால் விடுதலை செய்யப்படலாம். ஆனால், ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பதால் விடுதலை தாமதமாகி வருகிறது. இதற்கான காரணமும் தெரியவில்லை. 

அற்புதம்மாள்

ஏழு பேரின் விடுதலைக்காகப் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடிவருகிறார். ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்வை அற்புதம்மாள் நிகழ்த்தி வருகிறார். வரும் மார்ச் 9-ம் தேதி விடுதலையை வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துகிறார். இதற்கிடையே, இன்று பேரறிவாளன் எட்டாம் வகுப்பு படிக்கும்போது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் ஜாமீனில் வெளிவந்தபோது எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார் அற்புதம்மாள். 

பேரறிவாளன்

அதில், ``பாசமும் அன்பும்தான் எங்கள் குடும்பச் சொத்து. 28 ஆண்டு போராட்டத்தில் இழந்த மகிழ்ச்சி தற்காலிகமாக கிடைத்த நேரம் தான் அந்தப் புகைப்படத்தில் இருப்பது. அறிவு எட்டாம் வகுப்பு படிக்கும்போது எடுத்த குடும்ப புகைப்படம் அது. அதற்குப் பிறகு அறிவு ஜாமீனில் வந்தபிறகு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்தோம். நிரந்தர நிம்மதி ஆளுநரின் ஒற்றைக் கையெழுத்தில் நிற்கிறது. இன்றைக்கு அந்த நிம்மதி கிடைக்குமா எனத் தெரியவில்லை" எனப் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அற்புதம்மாளிடம் பேசினோம். அதில், ``வரும் 30-ம் தேதியுடன் ஆளுநர் கையெழுத்திட உத்தரவிட்டு ஆறு மாதம் ஆகிறது. இந்த தாமதத்தை உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும், பதினைந்து மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் விதமாக மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துகிறேன். 

பேரறிவாளன்

ஆளுநர் கையெழுத்திட வேண்டுமெனக் கூறிதான் மக்கள் சந்திப்பு நடத்தி வருகிறேன். அவர் கையெழுத்து போடும் வரை எனது போராட்டம் தொடரும். நிம்மதியாகவும், அமைதியும் இருக்கிற வாழ்க்கையைத் தான் நான் கேட்கிறேன். நாங்கள் இழந்த 28 ஆண்டுக்காலத்தில் ஒரு மணி நேரத்தை யாரவது திருப்பி தரமுடியுமா.  நாங்கள் ஒரு குடும்பமாக ஒன்றாக இருக்கவே விரும்புகிறோம். அதற்காகவே இந்தப் போராட்டம் மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறேன். இன்னும் மற்ற மாவட்ட மக்களைச் சந்திக்க உள்ளேன். விடுதலையில் சட்ட விதிமீறல்கள் நடந்துள்ளது" என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close