திருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம்! - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்  | four politicians are involved in thiruthani student murder

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (22/02/2019)

கடைசி தொடர்பு:13:30 (22/02/2019)

திருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம்! - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள் 

 கொலைசெய்யப்பட்ட மாணவியின் எலும்புகூடு

திருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிக்கிய 5 பேரில் ஒருவர் கல்லூரி மாணவர், மற்ற 4 பேர் அரசியல்வாதிகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளி. இவரின் மகள் உஷா (பெயர் மாற்றம்). கீச்சலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். இவரின் வீட்டுக்கும் பள்ளிக்கும் 5 கிலோ மீட்டர் தூரம். இதனால் கீச்சலம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டம் வழியாக குறுக்குப்பாதையில் பள்ளிக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் உஷா. இந்த நிலையில், கடந்த 7.9.2018-ல் பள்ளிக்குச் சென்ற உஷா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் சுப்பிரமணி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். கடந்த 11.2.2019-ல் கீச்சலம் கரும்புத் தோட்டத்தில் உஷாவின் எலும்புக்கூடு மீட்கப்பட்டது. 

  கொலைசெய்யப்பட்ட மாணவி சிறைவைக்கப்பட்ட மாந்தோப்பு வீடு

இதையடுத்து, `மாணவி மாயம்' என்ற வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றினர். இந்த வழக்கில் கல்லூரி மாணவர் சங்கரய்யா மற்றும் நாதமுனி, மோகன், கிருஷ்ணமூர்த்தி, ஜெகதீஷ்பாபு ஆகிய 5 பேரை போலீஸார் கைதுசெய்தனர். இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் மாணவி உஷா எப்படியெல்லாம் சித்ரவதை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியானது.  தற்போது கைதான 5 பேரின் பின்னணி குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற உஷாவை வழிமறித்த சங்கரய்யா, அந்தப்பகுதி மாந்தோப்பு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த வீட்டிலிருந்த நாதமுனி மற்றும் அவரின் கூட்டாளிகள் மாணவி உஷாவை தங்களின் கட்டுப்பாட்டில் 5 நாள்கள் வைத்திருந்தனர். அவர்கள் மாணவியிடம் தவறாக நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர். 

 இதுகுறித்து புதுவெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``நாதமுனி, ஜெகதீஷ்பாபு, கிருஷ்ணமூர்த்தி, மோகன் ஆகியோர் அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் மாணவி மாயமான வழக்கில் சங்கரய்யா மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தபோது ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் தலையீட்டு அவரைக் காப்பாற்றிவிட்டனர். ஆனால், உஷாவின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டபிறகும் வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீஸார் தயங்கினர். அப்போது மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து 5 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆனால், இன்னும் சிலருக்கு மாணவி கொலையில் தொடர்பு உள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த அவர்கள் மீது போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றனர். 
 கொலை செய்யப்பட்ட மாணவிக்காக ஆஜராகும் வழக்கறிஞர் அருள்இதுகுறித்து வழக்கறிஞர் அருள் கூறுகையில், ``பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் மாணவியின் வழக்கை ஆரம்பத்திலிருந்தே சரியாக விசாரிக்கவில்லை. மாணவி மாயமானதும் சங்கரய்யா மீது சந்தேகம் இருப்பதாக மாணவியின் தந்தை சுப்பிரமணி போலீஸிடம் கூறியுள்ளார். ஆனால், சங்கரய்யாவிடம் போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை. கீச்சலம் பகுதியில்தான் மாணவி அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார். சங்கரய்யாவிடம் விசாரித்திருந்தால் இந்தத் தகவல் அப்போதே கிடைத்திருக்கும். அதோடு மாணவியும் உயிரோடு கிடைத்திருப்பார். ஆனால், பொதட்டூர்பேட்டை போலீஸாரின் மெத்தனப்போக்கே மாணவியின் மரணத்துக்கு காரணம். 

 மாணவியின் எலும்புக்கூடு கண்டெடுத்தப்பிறகும்கூட இந்த வழக்கில் போலீஸாரின் ஒத்துழைப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை. எப்.ஐ.ஆர் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை பள்ளிப்பட்டு நீதிமன்றத்தில் சமர்பித்திருக்க வேண்டும். அந்த ஆவணங்கள் பள்ளிப்பட்டு நீதிமன்றத்திலிருந்து வழக்கு விசாரணை நடைபெற உள்ள திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை திருவள்ளூர் நீதிமன்றத்துக்கு ஆவணங்கள் வரவில்லை. அந்தளவுக்குதான் பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்தில் செயல்பாடு இருக்கிறது. இதனால்தான் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்யவுள்ளோம். 

இதற்கிடையில் கைதான நாதமுனி, ஜெகதீஷ், கிருஷ்ணமூர்த்தி, மோகன் ஆகியோர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினர் செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் தலையீடுதான் போலீஸாரால் தங்களின் கடமையைச் சரிவர செய்ய முடியவில்லை. 

கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர்

மாணவிக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் மனுவாக மாணவியின் தந்தை சுப்பிரமணி கொடுத்துள்ளார். தொடர்ந்து,  தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் நலவாரியத்திடம் முறையிடவுள்ளோம். இந்த வாரியத்தின் உறுப்பினர் ஆனந்த், தற்போது வெளிமாநிலத்தில் இருக்கிறார். அவரைச் சந்தித்தப்பிறகு இந்த வழக்கு விசாரணையில் அதிரடி திருப்பங்கள் ஏற்படும். கடமையைச் சரிவர செய்யாத காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று நம்புகிறோம்" என்றார். 

மாணவிக்கு நீதிகேட்டு போராடிய சிலர் மீது பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிக்கு நீதிகேட்டுதானே நாங்கள் போராடினோம். அதற்கு எங்கள் மீது காவல்துறையில் எப்படி வழக்கு பதிவு செய்யலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதட்டூர் காவல் நிலையத்தில் மாணவிக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது பொது சொத்தை சேதப்படுத்தியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது போன்ற பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

 மாணவி கொலை வழக்கில் கைதானவர்கள்

இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீஸார் கூறுகையில்,`` மாணவிக்கு நீதிகேட்டுப் போராட்டம் நடத்தியவர்கள், மாணவி படித்த ஸ்கூலில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல மாணவியை சிறைவைத்திருந்த மாந்தோப்பு வீட்டை சூறையாடியுள்ளனர். இதனால்தான் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். மாணவிக்கு ஆதரவாக அறவழியில் போராடிய இன்னொரு தரப்பினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றனர். 

மாணவி உஷாவை இழந்த அவரின் பெற்றோர் சுப்பிரமணி, எல்லாம்மாள் மற்றும் சகோதரர் சரத்பாபு ஆகியோருக்கு ஆறுதல் கூற தினமும் சிலர் வருகின்றனர். மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என சுப்பிரமணியும் எல்லாம்மாளும் ஒவ்வொரு இடமாக சென்றுவருகின்றனர். டெல்லியில் மாணவி நிர்பயாவின் கொலைக்கு பல்வேறு அமைப்புகள் குரல்கொடுத்தன. ஆனால், தமிழகத்தில் நடந்த என் மகள் கொலையை ஒருசிலரைத் தவிர யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இதற்கு காரணம் கைதானவர்கள் ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள். என் மகள் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டேன் என்று சபதமிட்டுள்ளனர் சுப்பிரமணியும் எல்லாம்மாளும்.


[X] Close

[X] Close