`கலைஞர் மறைந்தபோது கண்கலங்கியதை என்னால் மறக்க முடியாது!' - விஜயகாந்த் குறித்து நெகிழ்ந்த ஸ்டாலின் | mk stalin met vijayakanth at his residency

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (22/02/2019)

கடைசி தொடர்பு:14:40 (22/02/2019)

`கலைஞர் மறைந்தபோது கண்கலங்கியதை என்னால் மறக்க முடியாது!' - விஜயகாந்த் குறித்து நெகிழ்ந்த ஸ்டாலின்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். 

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் அமெரிக்கா சென்று சிகிச்சைப்பெற்றுத் திரும்பினார். சென்னை திரும்பிய அவருக்கு தே.மு.தி.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். `கேப்டன் ஆரோக்கியமாக உள்ளார்' என்று அவரின் மனைவி பிரேமலதா தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் தே.மு.தி.க சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் விஜயகாந்தைச் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் தமிழக அரசியல் சூழ்நிலை, கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது. 

ரஜினி

இதற்கிடையே, இன்று நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்தைச் சந்தித்து நலம் விசாரித்தார். சந்திப்புக்குப் பின் பேசிய ரஜினி, ``உடல் நலம் விசாரிக்கவே வந்தேன். நான் உடல்நலம் சரியில்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது பார்க்கவந்தவர் கேப்டன். அவரைச் சந்தித்தது மகிழ்ச்சி. அவர் எப்போதும் நல்லா இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன். துளிகூட அரசியல் இல்லை'' என்றார். ரஜினியை அடுத்து தற்போது தி.மு.க தலைவர் ஸ்டாலின், விஜயகாந்தைச் சந்தித்து உடல்நலம் விசாரித்துள்ளார். சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ``நானும் அவரும் நீண்டகால நண்பர்கள். அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன். கருணாநிதி மீது பாசம், அன்பு கொண்டிருந்தார். கலைஞர் மறைந்தபோது வெளிநாட்டில் இருந்த காரணத்தால் விஜயகாந்த்தால் அஞ்சலி செலுத்த முடியவில்லை என்றாலும் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுப் பேசினார்.

அந்த வீடியோவில் அவர் கலைஞர் குறித்து கண்கலங்கி பேசியது இன்னும் நம் நெஞ்சங்களில் இருக்கிறது. சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியபோது நேராகக் கலைஞர் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். தற்போது சிகிச்சை முடிந்து நல்ல நிலையில் உடல்நலம் தேறி வந்திருக்கிறார். இன்னும் ஆரோக்கியமாக இருந்து நாட்டுக்குப் பாடுபட வேண்டும் எனப் பாராட்டுகளை தெரிவித்து வந்திருக்கிறேன். அவரைவிட நான் வயதில் மூத்தவன் என்பதால் என்னை அண்ணன் என அழைப்பார்" என்றார். அப்போது, சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசப்பட்டதா. தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வந்தால் வரவேற்பீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, ``அரசியல் பேசுவதற்காக நான் வரவில்லை. மனிதாபிமான அடிப்படையில் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன். உங்களின் நல் எண்ணத்துக்கு எனது வாழ்த்துகள்" என்றார் ஸ்டாலின்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close