`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்' | DMK - VCK Seat sharing in lokshaba Election

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (22/02/2019)

கடைசி தொடர்பு:16:10 (22/02/2019)

`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'

விசிக திருமாவளவன், ஸ்டாலின் சந்திப்பு

தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு எத்தனை தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த நிலையில், வி.சி.க தரப்பிலிருந்து மூன்று தொகுதிகள் கேட்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என 10 தொகுதிகள் முடிவாகியுள்ளன. இந்தக் கூட்டணியில் இடம் பெற உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க, வி.சி.க ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ம.தி.மு.க சார்பில் 4 தொகுதிகள் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்துவரும் நேரத்தில், இன்று மாலை நடைபெற உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அப்போது,  3 தொகுதிகளைக் கேட்க அந்தக் கட்சி முடிவுசெய்துள்ளது. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், ``தமிழகம் முழுவதும் வி.சி.க-வுக்கு கணிசமான ஓட்டுவங்கி உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் எங்களுக்கு திருவள்ளூர், சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 1.5 சதவிகித வாக்குகள் கிடைத்ததாகக் கணக்கிடப்பட்டது. சிதம்பரம் தொகுதியில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், 3,01,041 வாக்குகளைப் பெற்றாலும், அ.தி.மு.க வேட்பாளர் சந்திரகாசியிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார். 

 திருமாவளவன்

திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார், அ.தி.மு.க வேட்பாளர் வேணுகோபாலிடம் தோல்வியடைந்தார். தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறவில்லை என்றாலும், தமிழகத்தில் எங்கள் கூட்டணிக் கட்சியின் வெற்றி வாய்ப்புக்கு உறுதுணையாக இருந்தோம்.  இந்தத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் வி.சி.க இடம் பெற உள்ளது. கடந்த முறை, போராடி இரண்டு தொகுதிகளைப் பெற்றோம். ஆனால், இந்த முறை மூன்று தொகுதிகளைக் கேட்க  உள்ளோம். சிதம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளின் பெயரைக் குறிப்பிட்டு, அதில் மூன்று தொகுதிகளை கேட்க உள்ளோம். மூன்று தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அரசியல் களத்தில் வி.சி.க-வின் பங்களிப்பு தொடர்ந்து இருந்துவருகிறது. இதனால், தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நாற்பதுக்கு நாற்பது என்பதே தி.மு.க கூட்டணியின் இலக்காக உள்ளது. எதிரணியினருக்கு இந்தத் தேர்தல் ஒருபாடமாக அமையும்" என்றனர். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதியிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என சில கூட்டணி கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதும், வி.சி.க தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகே, திருவள்ளூர் தொகுதி வி.சி.க-வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் திருவள்ளூர் தொகுதி பறிபோனதால், தி.மு.க நிர்வாகிகள் தரப்பிலிருந்து சரியான ஒத்துழைப்பு வி.சி.க-வுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால்தான் திருவள்ளூர் தொகுதியை இந்தமுறை வி.சி.க கேட்கவில்லை. அதற்குப் பதிலாகத்தான் காஞ்சிபுரம் தொகுதியைக் கேட்க முடிவுசெய்துள்ளது. 

 தொகுதிகள் பங்கீடு பேச்சுவார்த்தை

காஞ்சிபுரம் தொகுதியை தி.மு.க விட்டுகொடுக்க வாய்ப்பில்லை. இதனால்தான் பொது தொகுதியான கள்ளக்குறிச்சியை வி.சி.க தன்னுடைய பட்டியலில் சேர்த்துள்ளது. சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகள் அ,தி.மு.க கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்படும் என்ற பேச்சு உள்ளது. பெரும்பாலும் இந்தத் தொகுதிகள் பா.ம.க-வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால், வி.சி.க, பா.ம.க-வுக்கு இடையே கடும் போட்டி நிலவும். இதனால், அந்த இரண்டு தொகுதிகளிலும் இப்போதே பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது. 

 இந்த முறை எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் வி.சி.க சிதம்பரத்தில் களமிறங்க உள்ளது. இதற்காக, தேர்தல் ஆரம்பகட்ட பணிகளை வி.சி.க-வினர் சிதம்பரம் தொகுதியில் செய்துவருகின்றனர். கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்த வி.சி.க, இந்தமுறை அந்தத் தவறு நடக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது. இதனால் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவது உறுதியான நிலையில், வெற்றிபெறவும் மாஸ்டர் ப்ளான் ஒன்றை அந்தக் கட்சி வைத்துள்ளதாம். 


[X] Close

[X] Close