சரமாரியாகத் தாக்கிய காவலர்கள்! - நீதி கேட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள் | Transgender protest at police station

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (22/02/2019)

கடைசி தொடர்பு:16:40 (22/02/2019)

சரமாரியாகத் தாக்கிய காவலர்கள்! - நீதி கேட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

திருப்பூரில், திருநங்கைகளை காவல் துறையினர் தாக்கியதைக் கண்டித்து, திருப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 114 திருநங்கைகள் வசித்துவருகிறார்கள். இவர்கள் தங்குவதற்காக, நெருப்பெரிச்சல் என்ற பகுதியில் அரசாங்கத்தின் சார்பில் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், அரசாங்கத்தின்மூலம் திருநங்கைகளுக்குப் பல்வேறு தொழில்பயிற்சிகளும் வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில், அரசின்மூலம் தொழிற்பயிற்சி பெற்று, தனியார் பின்னலாடை நிறுவனத்தில் தையற்கலைஞராகப் பணியாற்றிவருகிறார்கள் நாகலட்சுமி மற்றும் சிவகாமி ஆகிய திருநங்கைகள்.

இந்த நிலையில், நேற்றைய தினம் இரவு பணிமுடிந்து பிரிட்ஜ்வே காலனி என்ற பகுதி வழியாக நடந்துசென்றிருக்கிறார்கள் நாகலட்சுமியும், சிவகாமியும். அப்போது அவ்வழியே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், இவ்விரு திருநங்கைகளையும் அழைத்து விசாரணை என்கிற பெயரில் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த சம்பவத்தைக் கண்டித்தும், திருநங்கைகளைத் தாக்கிய காவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்றைய தினம் 50- க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், அச்சம்பவம் தொடர்பாக புகார் மனுவும் அளித்தனர். ஆனால், காவல் துறையினர் திருநங்கைகளின் புகார் மனுவை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள், உடனடியாக காவல் நிலையத்தின் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மாநகரின் முக்கிய சாலைப் பகுதியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளை காவல் துறையினர் சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


[X] Close

[X] Close