`வாசல்கள் திறந்திருக்கின்றன.. கவனமாக முடிவெடுப்போம்!'- பிரேமலதாவுக்கு விஜயகாந்த் சொன்ன சீக்ரெட் | "Doors are still open. We should take decisions cautiously!" says Vijayakanth to Premalatha

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (22/02/2019)

கடைசி தொடர்பு:16:40 (22/02/2019)

`வாசல்கள் திறந்திருக்கின்றன.. கவனமாக முடிவெடுப்போம்!'- பிரேமலதாவுக்கு விஜயகாந்த் சொன்ன சீக்ரெட்

விஜயகாந்த்தைச் சந்தித்த ரஜினி


அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள நிலையில் விஜயகாந்த்தை  திருநாவுக்கரசர், ரஜினி, ஸ்டாலின் ஆகியோர் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும், பா.ஜ.க.வும் இடம் பெறுவது உறுதியாகிவிட்டது. தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து அ.தி.மு.க., பா.ஜ.க. தரப்பிலிருந்து கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி என்ற தகவல் வெளியான நிலையில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று விஜயகாந்த்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அ.தி.மு.க. இல்லையென்றால் என்ன நாங்கள் இருக்கிறோம் என்று திருநாவுக்கரசர் சொல்லியதாகச் சொல்லப்படுகிறது. விஜயகாந்த்தைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்த திருநாவுக்கரசர் அதை சூசகமாக வெளிப்படுத்தினார். 

 திருநாவுக்கரசர் சந்திப்பை அடுத்து இன்று விஜயகாந்த்தை ரஜினி சந்தித்துப் பேசியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் விஜயகாந்த், ரஜினி சந்திப்பு எதற்காக நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விஜயகாந்த்திடம் நலம் விசாரிக்கச் சென்றதாக ரஜினி கூறியுள்ளார். கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துவரும் சமயத்தில் இந்தச் சந்திப்பு முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

 விஜயகாந்த்துடன் தேர்தல் பங்கீட்டு குழு

இது குறித்து தே.மு.தி.க. தலைமைக் கழக நிர்வாகிகள் கூறுகையில், ``தே.மு.தி.கவுக்கு ஏற்பட்டுள்ள மவுசு காரணமாகத்தான் அரசியல் கட்சித் தலைவர்கள் கேப்டனைச் சந்தித்துவருகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுவதை அந்தக் கட்சியில் உள்ள சிலர் விரும்பவில்லை. ஆனால், பா.ஜ.க.வின் முயற்சியால்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துவருகிறது. நாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாகத்தான் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. திருநாவுக்கரசர் சந்திப்புக்குப் பிறகு தேர்தல் பங்கீட்டுக் குழுவினருடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பத்துத் தொகுதிகள் கேளுங்கள் அப்போதுதான் 8 தொகுதிகள் கிடைக்கும் எனச் சொல்லியிருக்கிறார். அதற்கு அ.தி.மு.க. கூட்டணியில் 5 தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதாக அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர் என்ற தகவலை கேப்டனிடம் தேர்தல் பங்கீட்டுக் குழுவினர் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். அதைக்கேட்ட அவர், `கூட்டணி வாசல்கள் திறந்திருக்கின்றன. கவனமாக முடிவெடுப்போம்' என்று கூறினார். கேப்டனின் இந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். திருநாவுக்கரசர் சந்திப்புக்குப் பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விஜயகாந்தைச் சந்தித்தார். இதனால் இந்தத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு மவுசு அதிகரித்துள்ளது" என்றனர். 

 விஜயகாந்த்தை சந்தித்த ரஜினி

விஜயகாந்த்தை ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தது அ.தி.மு.க, பா.ஜ.க.வினருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்த ஸ்டாலினிடம் `தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுமா' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், `உங்களின் நல்ல எண்ணத்துக்கு நன்றி' என்று மட்டும் கூறினார். விஜயகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பி சில நாள்கள் கடந்த நிலையில் ஸ்டாலின் இன்று எதற்காக அவரைச் சந்தித்தார் என்ற கேள்வி அ.தி.மு.க.விலும் பா.ஜ.கவிலும் எழுந்துள்ளது. கருணாநிதியைப் போல அரசியல் சாதுர்யத்தை ஸ்டாலின் பின்பற்றுகிறாரா என்பதை உளவுத்துறை மூலம் அ.தி.மு.க.வும் பா.ஜ.கவும் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.

விஜயகாந்த்தை ஸ்டாலின் இன்று சந்திக்கப்போவதாகத் தகவல் உளவுத்துறை மூலம் அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.கவுக்கும் தெரியவந்ததும் அவர்கள் உஷாராகியுள்ளனர். இந்தச் சந்திப்பைத் தடுக்க முதலில் யோசித்துள்ளனர். அதன்பிறகு சந்திக்கப்பட்டும், விஜயகாந்த்தின் மனநிலை எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம் என்று அ.தி.மு.க., பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். திருநாவுக்கரசர், ஸ்டாலின் சந்திப்பை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் விஜயகாந்த்தைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை கண்காணிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் சாலிகிராமத்திலேயே முகாமிட்டுள்ளனர் உளவுத்துறையினர். உடனுக்குடன் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுவருகிறது. 

 இந்தச் சூழ்நிலையில் பிரேமலதாவிடம் பேசிய பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர், `நீங்கள் இந்தக் கூட்டணி வரவேண்டும். அ.தி.மு.க.விடமிருந்து நீங்கள் கேட்கும் தொகுதிகளைப் பெற்றுத்தருகிறோம். உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்' என்று சொல்லியுள்ளார். 

மதில் மேல் பூனையாக இருக்கிறது தே.மு.தி.க. 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close