`எந்தக் கட்சியுடனும் ஒப்பிடவில்லை; எங்கள் பலம் எங்களுக்குத் தெரியும்!’ - பிரேமலதா விஜயகாந்த் | Premalatha Vijayakanth speaks about DMDK alliance talks

வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (22/02/2019)

கடைசி தொடர்பு:17:21 (22/02/2019)

`எந்தக் கட்சியுடனும் ஒப்பிடவில்லை; எங்கள் பலம் எங்களுக்குத் தெரியும்!’ - பிரேமலதா விஜயகாந்த்

`எந்தக் கட்சியுடனும் எங்களை ஒப்பிடவில்லை; தே.மு.தி.க-வின் பலம் என்னவென்று எங்களுக்குத் தெரியும்’ என்று அக்கட்சியின் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார். 

பிரேமலதா விஜயகாந்த்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தமிழகத்தின் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க - பா.ஜ.க - பா.ம.க கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியும் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், பா.ஜ.க-வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 இடங்களுடன் புதுச்சேரியும் சேர்த்து 10 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என பா.ஜ.க முயற்சித்துவருகிறது. அமெரிக்காவில் சிகிச்சைபெற்றுத் திரும்பிய விஜயகாந்த்தை, அவரது இல்லத்துக்கே நேரில் சென்று சந்தித்தார் தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் பியூஷ் கோயல். இந்த சந்திப்பின்போது பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட தே.மு.தி.க-வின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். இதையடுத்து, விஜயகாந்த்தை தமிழகக் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

ஸ்டாலின் - விஜயகாந்த் சந்திப்பு

இன்று, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்துப் பேசினர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் அவரை சந்தித்துப் பேசிய ஸ்டாலின், 'இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது' என்று தெரிவித்தார். அதேபோல், 'விஜயகாந்த்துடனான சந்திப்பில் ஒருதுளிகூட அரசியல் இல்லை' என்று ரஜினி கூறியிருந்தார். 
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரமலதா விஜயகாந்த், `கூட்டணிகுறித்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் முடிவு அறிவிக்கப்படும். தேர்தல் கூட்டணிகுறித்த முடிவை தலைவர் அறிவிப்பார். பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை’ என்று தெரிவித்தார். 

ரஜினி - விஜயகாந்த் சந்திப்பு

அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வைவிட அதிக இடங்களை தே.மு.தி.க கேட்பதாலேயே இந்தத் தாமதம் ஏற்படுவாதாக வெளியாகும் தகவல்கள்குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த பிரேமலதா, ``எந்தக் கட்சியுடனும் எங்களை ஒப்பிடவில்லை. தே.மு.தி.க-வின் பலம் என்ன, வாக்கு வங்கி சதவிகிதம் என்ன என்பன போன்ற எங்களின் பலம் எங்களுக்குத் தெரியும். அதனால், இதையெல்லாம் சிந்தித்து தலைவர் நல்ல முடிவை அறிவிப்பார்’' என்றார்.


[X] Close

[X] Close