“பா.ம.க-விலிருந்து நான் ஏன் விலகினேன் தெரியுமா..?!’’ - வெடிக்கும் ராஜேஷ்வரி பிரியா | interview with rajeshwari priya

வெளியிடப்பட்ட நேரம்: 19:38 (22/02/2019)

கடைசி தொடர்பு:12:03 (16/03/2019)

“பா.ம.க-விலிருந்து நான் ஏன் விலகினேன் தெரியுமா..?!’’ - வெடிக்கும் ராஜேஷ்வரி பிரியா

நான் கட்சியிலிருந்து விலக ஒரே காரணம், திராவிடக் கட்சிகளுடனான கூட்டணி மட்டும்தான்.”

“பா.ம.க-விலிருந்து நான் ஏன் விலகினேன் தெரியுமா..?!’’  - வெடிக்கும் ராஜேஷ்வரி பிரியா

பா.ம.க மீண்டும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த நிலையில், ``சுயநலத்துக்காக எது வேண்டுமென்றாலும் செய்யக்கூடிய எண்ணம் எனக்கில்லை. ஏனெனில், நான் அரசியலை வைத்துப் பிழைப்பு நடத்தவில்லை” என விமர்சித்த அக்கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் ராஜேஷ்வரி பிரியா, தான் வகித்து வந்த பதவியிலிருந்தும், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகினார். இந்நிலையில், பா.ம.க அமைத்துள்ள புதிய கூட்டணி குறித்தும், இந்தக் கூட்டணியால் பா.ம.க தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்திகள் குறித்தும் ராஜேஷ்வரி பிரியாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். இதென்ன நியூ ஈயர் ஸ்பெஷலா

``பா.ம.க-விலிருந்து விலகும் முடிவை எப்போது எடுத்தீர்கள். ஏற்கெனவே அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்கப்போவது பற்றி உங்களுக்குத் தெரியவே இல்லையா?”

``அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. பொதுக்குழுவில் ஒருமித்த கருத்து உள்ள கட்சிகளோடு கூட்டணி, அதை முடிவு செய்யும் முழு அதிகாரம் ஐயாவுக்கு (மருத்துவர் ராமதாஸ்) என்ற முடிவு எடுக்கப்பட்டது. டி.வி விவாதங்களில் கலந்துகொள்பவர்களுக்குக்கூடச் `சில நாள்கள் தி.மு.க-வை விமர்சிக்காதீர்கள்; சில நாள்கள் அ.தி.மு.க-வை விமர்சிக்காதீர்கள்' எனச் சொல்லப்பட்டு வந்ததே தவிர, நிலையான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எப்போது அ.தி.மு.க கூட்டணி குறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளிவந்ததோ, அப்போதுதான் கட்சியிலிருந்து விலகவேண்டும் என்று முடிவு செய்தேன்.”

``தி.மு.க-வோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது போன்ற தகவல்கள் ஏற்கெனவே வெளியாகின. நீங்கள் கட்சியில் இருக்கும்போது உங்களுக்கு அது தெரியவில்லையா?”

``அந்தச் செய்திகள் அனைத்தும் பொய், வதந்தி என்றுதான் கட்சியின் சார்பில் சொல்லிவந்தார்கள்.”

``ஒருவேளை, தி.மு.க உடன் கூட்டணி வைத்திருந்தாலும் நீங்கள் இதே நிலைப்பாட்டைத்தான் எடுத்திருப்பீர்களா?”

``திராவிடக் கட்சிகளோடு இனிக் கூட்டணி இல்லை என்ற பிறகுதான் நான் பா.ம.க-விலேயே இணைந்தேன். தி.மு.க-வோடு கூட்டணி வைத்தாலும் இதே நிலைப்பாட்டைத்தான் எடுத்திருப்பேன். `ஊழலை ஒழிப்போம்' எனச் சொல்கிறார்கள், திராவிடக் கட்சிகளிலிருந்து மாறுபட்ட திட்டங்களை முன்வைக்கின்றனர் என்பதால்தான் அக்கட்சிக்காக உழைத்தேன்.”

``நீங்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வழங்கப்படாததால்தான் கட்சியிலிருந்து விலகியதாகச் சொல்லப்படுகிறதே?”

``நான் திருவாரூர் இடைத்தேர்தலில் பங்கேற்க விருப்பப்படுவதாகத் தலைமைக்குத் தகவல் அளித்திருந்தேன். ஆனால், மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை எந்தக் கருத்தையும் நான் பகிர்ந்துகொள்ளவில்லை. நான் கட்சியிலிருந்து விலக ஒரே காரணம், திராவிடக் கட்சிகளுடனான கூட்டணி மட்டும்தான்.”

ராஜேஷ்வரி பிரியா

``திருவாரூர் இடைத்தேர்தலில் பங்கேற்க ஆர்வம் காட்டியபோது, கட்சியில் என்ன முடிவைத் தெரிவித்தார்கள்?”

``நான் விருப்பம் தெரிவித்த சில நாள்களிலேயே தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், அதுகுறித்து பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை.”

`` `சங்கத்திலிருந்து கட்சியாக மாறாது' எனச் சொன்னார்கள். அதேபோல், `குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வரமாட்டார்கள்' எனச் சொல்லிய பல நிலைப்பாடுகளில் ஏற்கெனவே அவர்கள் மாறியுள்ளனர். இந்நிலையில், திராவிடக் கட்சிக் கூட்டணி குறித்து நிலைப்பாட்டை மாற்றமாட்டார்கள் என எப்படி நம்பினீர்கள்?”

``நான் வெளிநாட்டிலிருந்து வந்தபோது பா.ம.க-வின் தேர்தல் அறிக்கைகள்தான் என்னை மிகவும் கவர்ந்தது. அதேபோல் ஊழல் ஒழிப்பு, திராவிடக் கட்சிகளோடு இனிக் கூட்டணி இல்லை எனச் சொல்லி முன்பு வைத்த கூட்டணிக்கு மன்னிப்பு கேட்டது போன்ற சம்பவங்கள்தான் மீண்டும் தவறான முடிவுகளை எடுக்கமாட்டார்கள் என நம்பினேன்.”

``நீங்கள் பா.ம.க-வில் இருந்தபோது கூட்டணி குறித்த உங்களுடைய முடிவு எதுவாக இருந்தது?”

``நாடாளுமன்றத் தேர்தலைக் கூட்டணி இல்லாமல் சந்திக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். அதேவேளையில், திராவிடக் கட்சிகள் இல்லாமல் வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் எனக்கு ஏற்புடையதாக இருந்தது.”

``ஊழல் குறித்து உங்களுடைய பேச்சில் கோபம் இருப்பது பார்க்க முடிகிறது. நீங்கள் பா.ம.க-வில் இருந்தபோதே அன்புமணி ராமதாஸ் மீதே ஓர் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதே?”

``குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்தானே குற்றம். இது, அரசியல் காரணங்களுக்காகப் போடப்பட்ட வழக்கு என்றுதான் கட்சியின் சார்பில்  சொன்னார்கள்.”

``அ.தி.மு.க., தி.மு.க ஊழலை வலுவான குரலில் சொல்கிற நீங்கள், இதை மென்மையாக அணுகக் காரணம் என்ன?”

``நிறைய உயரதிகாரிகள் கையெழுத்திட்டதின்கீழ் அன்புமணியும் கையெழுத்திட்டிருக்கிறார். அதுதவிர, பணப் பரிவர்த்தனை நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால், அ.தி.மு.க-வில் ஒதுக்கப்பட்ட நிதியிலேயே முறைகேடுகள் நடந்துள்ளது. அன்புமணி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இதுபற்றி விவாதிப்போம்.”

``செய்தியாளர் சந்திப்பில் மக்கள் ஆதரவு அளித்தால் புதுக் கட்சி ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னீர்கள். உண்மையிலேயே அந்த எண்ணம் உள்ளதா?”

``நான் சிங்கப்பூரிலிருந்து வந்தபோதே அந்த எண்ணம் இருந்தது. மக்களுக்கான சேவைகளில் ஈடுபடுவது எனக்கு கூடவே பிறந்த ஒன்று. எனவே, கட்சியின் வாயிலாக மக்களுக்குச் சேவை செய்ய விரும்புகின்றேன்.”

அ.தி.மு.க- பா.ம.க கூட்டணி

``பா.ம.க. - அ.தி.மு.க கூட்டணி ஏன் என நினைக்கிறீர்கள்?”

``முப்பது ஆண்டுகளாகக் கட்சி நடத்திக்கொண்டிருக்கும் அவர்களுக்குத்தான் கூட்டணிக்கான காரணம் தெரியும். அந்தக் காரணம் தெரியாமல்தான் நான் கட்சியிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.”

``நீங்கள் செய்ய நினைக்கும் மாற்றங்களை, இயக்க அரசியல் மூலமாகவும் செய்ய முடியும். நீங்கள் கட்சி அரசியலை எடுத்ததற்கான காரணம் என்ன?”

``இயக்கங்களும், சேவை மையங்களும் நல்ல முறையில்தான் செயல்பட்டு வருகின்றன. ஆனால், தேர்தல் அரசியல் களத்தில்தான் தவறுகள் அதிகம் நடக்கின்றன. அதில், மாற்றத்தை ஏற்படுத்தத்தான் முயல்கின்றேன்”

``பெரியார், இயக்க அரசியல் நடத்திக்கொண்டே, `இவர் முதல்வராக வரவேண்டும்' என அரசியல் தலைவர்களை உருவாக்கினார், அது மாதிரி முயலலாமே?”

``அவர் செய்த தவற்றை, என்னையும்  செய்யச் சொல்கிறீர்கள். அவர் கை காட்டியவர்கள்தான் ஐம்பது ஆண்டுகள் ஆட்சி நடத்தி தமிழ் நாட்டை வீணாக்கியுள்ளனர்.”


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close