ராமநாதபுரம் கூட்டத்துக்குத் தாமதமாக வந்த அமித் ஷா -பெண்கள் கலைந்ததால் காலியான இருக்கைகள்! | Amit shah participated in BJP booth level workers meet in Ramnad

வெளியிடப்பட்ட நேரம்: 19:38 (22/02/2019)

கடைசி தொடர்பு:19:38 (22/02/2019)

ராமநாதபுரம் கூட்டத்துக்குத் தாமதமாக வந்த அமித் ஷா -பெண்கள் கலைந்ததால் காலியான இருக்கைகள்!

12 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் செய்த காங்., தி.மு.க கூட்டணி நாட்டிற்கு என்ன நல்லது செய்துவிடப்போகிறது. என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

ராமநாதபுரம் கூட்டத்தில் உரையாற்றும் அமித்ஷா

ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பா.ஜ.க பூத் கமிட்டி உறுப்பினர் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய அமித் ஷா, ``ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, மதுரை மீனாட்சி பாதங்களை தொட்டு வணக்கம் தெரிவிக்கிறேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்த பிறகு முதல் முறையாகப் பயணம் மேற்கொண்டுள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். தமிழகத்தில் 35 லோக்சபா தொகுதிகளையாவது அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி கைப்பற்றும். தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கும்.  

காஷ்மீரில் சமீபத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயிர்த் தியாகம் வீண் போகாது. அதில் தமிழக வீரர்கள் 2 பேர் அடங்குவர். மோடி அரசு தீவிரவாதத்தைச் சகித்துக்கொள்ளாது, தீவிரவாதத்திற்கு எதிரானதுதான் மோடி அரசு. உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கும். இந்தியாவில் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம் பல்வேறு தலைவர்களை இந்தியாவிற்கு வழங்கி உள்ளது. சுவாமி விவேகானந்தரை சிகாகோ மாநாட்டிற்கு மன்னர் பாஸ்கர சேதுபதி அனுப்பி வைத்தார். மண்ணின் மைந்தர் அப்துல் கலாம் கண்டறிந்த ஏவுகணை மூலம் பாரதத்தின் பாதுகாப்பை உறுதி செய்தார். எனவே, இப்பகுதி நாட்டின் சிறந்த பகுதி ஆகும். 2019 லோக் சபா தேர்தல் யுத்தத்திற்கு இம்மாநாடு முன்னுதாரணமாக அமையும்.தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் போட்டியிடும் 40 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும்.

அமித் ஷா

மெகா ஊழல் கூட்டணியான தி.மு.க., காங்., கூட்டணி இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். 12 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் செய்த காங்., தி.மு.க கூட்டணி நாட்டிற்கு என்ன நல்லது செய்து விடப் போகிறது. தி.மு.க., காங்.,கூட்டணி என்றால் அது ஊழல். தேசிய ஜனநாயக கூட்டணி எனில் அது முன்னேற்றம். மோடி மீண்டும் பிரதமரானால் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறும். ராகுல், ஸ்டாலின் கூட்டணியால் தமிழகத்திற்கு எவ்வித பயனுமில்லை. தமிழக மக்களுக்கு நாங்கள் செய்தது குறித்து கணக்கு சொல்லியே ஆக வேண்டும் என ஸ்டாலின் கேட்கிறார், பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் தமிழகத்திற்கு ரூ.94,540 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2014 - 2019. பா.ஜ ஆட்சியில் ரூ.5,42,068 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது காங்., ஆட்சியில் ஒதுக்கிய நிதியைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம். தமிழக மக்களுக்கு நாங்கள் கணக்குக் காட்டி விட்டோம். ஸ்டாலின், ராகுல் கூட்டணி தமிழக மக்களிடம் ஊழல் கணக்கு மட்டுமே காண்பிக்க முடியும். 

அமித்ஷா வருகை தாமதமானதால் காலியான இருக்கைகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் மோடி. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என உங்களுக்குத் தெரியுமா? நான் சொல்லட்டுமா? திங்கள் _ மாயாவதி, செவ்வாய் - அகிலேஷ்,  புதன் - சந்திரபாபு நாயுடு, வியாழன் - தேவகவுடா, வெள்ளி - மம்தா பானர்ஜி, சனி - ஸ்டாலின், ஞாயிறு - நாட்டிற்கு பிரதமர் இருக்க மாட்டார். அன்று பந்த். மோடி உலக மக்கள் விரும்பப்படும், நேசிக்கப்படும் தலைவராக உருவெடுத்துள்ளார். மத்தியில் பா.ஜ அரசு அமைய மோடி மீண்டும் பிரதமராக அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும். மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைந்தால் இந்திய வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக மாற்றப்படும்'' என்றார்.

தமிழக பா.ஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தேசியச் செயலாளர் எச்.ராஜா, தமிழக துணை தலைவர்கள் சுப.நாகராஜன், குப்புராமு, பி.டி.அரசகுமார், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் பொன்.பால கணபதி, கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜா, மாவட்டத் தலைவர் முரளிதரன், துணைத் தலைவர் குமார், மாவட்டச் செயலாளர் ஆத்ம கார்த்தி உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

அமித் ஷா பகல் 12.30 மணிக்கு மேடைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சுமார் 2 மணி நேரம் தாமதமாக வந்ததால் பகல் 2.30 மணிக்குத்தான் பேசத் தொடங்கினார். இதனால் காலையிலிருந்து கூட்ட அரங்கில் காத்திருந்த பெண்கள், அமித் ஷா பேசத் தொடங்கியவுடன் கூட்டத்திலிருந்து வெளியேறியபடி இருந்தனர். இதனால் பின் பகுதி இருக்கைகளில் பெரும்பாலானவை காலியாகக் கிடந்தன. 


[X] Close

[X] Close