`தி.மு.க-வை வேரோடு அழிக்கவேண்டிய தருணம் இது!’ - திண்டிவனம் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு | Tamilnadu CM Edappadi palanisamy speech in Tindivanam

வெளியிடப்பட்ட நேரம்: 21:37 (22/02/2019)

கடைசி தொடர்பு:22:01 (22/02/2019)

`தி.மு.க-வை வேரோடு அழிக்கவேண்டிய தருணம் இது!’ - திண்டிவனம் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க - பா.ம.க நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி உறுதியானதையடுத்து, கிரீன் வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ராமதாஸுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேநீர் விருந்து அளித்தார். ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்திற்கு விருந்துக்கு வருமாறு முதல்வருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, ராமதாஸ் அளிக்கும் விருந்தில் முதல்வர் இன்று கலந்துகொள்கிறார். இதற்கிடையில், திண்டிவனத்தில் கட்சி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் மாலை 4 மணிக்கு கலந்துகொள்வதாக இருந்தது. இதற்காக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் அருகே மேடை அமைக்கப்பட்டிருந்தது.

பொதுக்கூட்டம்

முதல்வரின் வருகைக்காக கட்சிக்காரர்களும் பொதுமக்களும் காத்திருந்தனர் 4 மணிக்கு வரவேண்டிய முதல்வர், 6 மணியாகியும் வரவில்லை. முதல்வர் வராததால் அங்கு கூடியிருந்த மக்கள் கிளம்பத் தொடங்கினர். கட்சிக்காரர்கள் மட்டும் முதல்வரின் வருகைக்காகக் காத்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்திருந்தார். 

அதிமுக

ஒருவழியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 8 மணியளவில் விழா மேடைக்கு வந்தார். நேராக மேடையேறியவர், அங்கு கூடியிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசியவர், ``நம் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் போன்ற பல கட்சிகள் சேர்ந்துள்ளன. வரும் தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல். நம் தமிழகத்தை வளமான தமிழகமாக மாற்றிட முக்கியமான தேர்தல். இந்த நாடாராளுமன்றத் தேர்தலில் நம் கூட்டணியைச் சார்ந்தவர்களை வெற்றிபெறச் செய்தால்தான், நம் தேவைகளை நாம் பூர்த்திசெய்ய முடியும். இந்தத் தேர்தலில் நம்முடைய கூட்டணிக் கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்து லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு  நாம் பாடம் புகட்ட வேண்டும். நம் கழகத்தைப் பலா் விமர்சித்துவந்தனர். அதை நாம் மாற்றும் வகையில் இந்தத் தேர்தல் அமைய வேண்டும். தி.மு.க-வை வேரோடு அழிக்க இதுதான் முக்கிய தருணம். நம்முடைய எதிரிகளை நாம் ஓட ஓட விரட்டவேண்டிய தேர்தல் இது. அ.தி.மு.க கூட்டணி ஒரு பலம் பொருந்திய கூட்டணி என எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக இந்தத் தேர்தல் அமைய வேண்டும்’’ என்று பேசினார்.
 


[X] Close

[X] Close