தைலாபுரம் இல்லத்தில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்-ஸுக்கு விருந்து! வாசல்வரை வந்து வரவேற்ற ராமதாஸ் குடும்பம் | EPS and OPS visits PMK founder Ramadoss's thailapuram house

வெளியிடப்பட்ட நேரம்: 22:27 (22/02/2019)

கடைசி தொடர்பு:22:34 (22/02/2019)

தைலாபுரம் இல்லத்தில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்-ஸுக்கு விருந்து! வாசல்வரை வந்து வரவேற்ற ராமதாஸ் குடும்பம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தனது தைலாபுரம் இல்லத்தில் விருந்து கொடுத்தார்.

தைலாபுரம் தோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் தைலாபுரம் தோட்டத்துக்கு விருந்துக்கு அழைத்திருந்தார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். அதன்படி முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் இரவு 9 மணிக்கு தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றடைந்தனர். முன்னதாக திண்டிவனத்தில் சட்டத்துறை  அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராமதாஸ் இல்லத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள்

அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  கூட்டத்தில் கலந்துகொண்டுபேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறுகிய காலத்தில் வர இருக்கிறது. அ.தி.மு.க தலைமையில் பா.ம.க, பா.ஜ.க, புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் இன்னும் பல கட்சிகள் நம் கூட்டணியில் சேர்ந்திருக்கிறார்கள். அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைய இருக்கிறது. அம்மா காலத்தைப் போலவே நாம் நின்றாலும், கூட்டணிக் கட்சிகள் நின்றாலும் நாம் அயராது உழைத்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். 
மத்திய அரசிடமிருந்து திட்டங்களை நிறைவேற்றவும், நிதியைப் பெறுவதற்குமான முக்கியமான தேர்தல் இது.

ராமதாஸ் இல்லத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள்

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி இருந்தாலும்,  நாடாளுமன்றத்தில் நமது எம்.பி-க்கள் பேசி திட்டங்களைப் பெற்று, வளமான தமிழகத்தை உருவாக்க முடியும். நம் வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்தத் தேர்தல் மூலமாக எதிர்கட்சிகளுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். அம்மாவின் மறைவிற்குப் பிறகு தி.மு.க இந்த ஆட்சியின் மீது எவ்வளவோ பழிகளைச் சுமத்தியது. அம்மாவிற்கு மணி மண்டபம் கட்டக் கூடாது என்பதற்காக எத்தனையோ வழக்குகள் போடப்பட்டன. தீய சக்தி தி.மு.க-வை வேரறுக்க இது முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தலில் நம் எதிரிகளை ஓட ஓட விரட்ட வேண்டும். அம்மாவின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். அ.தி.மு.க கூட்டணி பலம்பொருந்திய கூட்டணி என நிரூபிக்க வேண்டும்” என்றார்.

ராமதாஸ் இல்லத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள்

முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரும், திண்டிவத்தில் இருந்து தைலாபுரத்துக்கு ஒரே வண்டியில் வருவதாக இருந்தது. ஆனால், மதுரையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வருவதற்குத் தாமதமானதால், திண்டிவனம் விருந்தினர் மாளிகையில் காத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதன்பிறகு, இருவரும் தனித்தனி வாகனங்களில் தைலாபுரம் வந்தடைந்தனர். அவர்களுடன் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எம்.பி-க்கள் ஏழுமலை, ராஜேந்திரன்,  எம்.எல்.ஏ-க்கள் குமரகுரு, சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் மோகன் உள்ளிட்டோர் சென்றனர்.

9 மணியளவில் தைலாபுரம் தோட்டம் வந்தடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை வாசல் வரை வந்து ராமதாஸின் குடும்பத்தினர் வரவேற்றனர். அவர்களுக்கு சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து அன்புமணி ராமதாஸ் வரவேற்றார். சுமார் ஒருமணி நேரம் தைலாபுரம் தோட்டத்தில் இருந்த அவர்கள், 10 மணிக்கு மேல் கிளம்பிச் சென்றனர். பா.ம.க கூட்டணி உறுதிசெய்யப்பட்ட பின்னர், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேநீர் விருந்து கொடுத்திருந்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close