நாட்டின் 16வது கடலோரக் காவல்படை தலைமையகம் - தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார் ஆளுநர்! | Governor Panwarilal start up the 16th Coast Guard Headquarters in Thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (23/02/2019)

கடைசி தொடர்பு:10:36 (23/02/2019)

நாட்டின் 16வது கடலோரக் காவல்படை தலைமையகம் - தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார் ஆளுநர்!

கடலோரக் காவல்படை மையத்தின் தென்பகுதி தலைமையகமாகத் தூத்துக்குடி கடலோரக் காவல்படை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் 16வது கடலோர காவல் படையின் இத்தலைமையகத்தை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

ஆளுநர்

கடல்பகுதி பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி, இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு மண்டலத்தின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி கடலோர காவல் படை தனி தலைமையகமாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக, கிழக்கு கடற்கரையில் 150 கி.மீ., தொலைவு சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, வங்கக் கடலின் கோடியக்கரை முதல், அரபிக் கடலின், பூவார் ஏரியின் கழிமுகத் துவாரம் வரையில் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களுடன் புதுக்கோட்டை ராமநாதபுரம் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் கட்டுப்பாட்டுக்குள் சேர்க்கப்பட்டுள்ளன.  

ஆளுநர்

தற்போதுள்ள 3 ரோந்துக் கப்பல்கள், மண்டபம் கடலோர காவல்படையில் உள்ள 3 ஹோவர்கிராப்ட் கப்பல்கள் இவற்றுடன் புதிதாக 5 ரோந்துக் கப்பல்கள் விரைவில் தூத்துக்குடி கடலோர காவல்படையில் இணைக்கப்படுகிறன. ஹெலிகாப்டர் இறங்கும் வசதி கொண்ட ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா மற்றுமொறு புதிய ரோந்துக் கப்பல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி வருகிறது. அதைத் தொடர்ந்து, மேலும் 3 ரோந்துக் கப்பல்கள் தூத்துக்குடி கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட உள்ளன.

கடலோரக் காவல்படை

தூத்துக்குடி தலைமையகத்தில் இரு டோர்னியர் ரக விமானங்களும் இணைக்கப்பட உள்ளன. இதற்காகத் தனி விமானதளம் அமைப்பத்கற்க்கான பணியும் நில ஆர்ஜிதமும் முடிந்துள்ளது. இதுதவிர, மீட்பு மற்றும் தகவல் தொடர்புக்கு எம்.ஆர்.எஸ்.சி.க்கு (மெரிடைம் ரெஸ்க்யூ சர்ச் கம்யூனிகேசன்) உள்ளிட்ட வசதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் புதிய தலைமையகத்தின் துவக்க  விழா தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு புதிய தலைமையகத்தை திறந்து வைத்தார்.

ஆளுநர்

அப்போது அவர் பேசுகையில், ``கடந்த, 1978-ல் துவங்கப்பட்ட கடலோரக் காவல் சட்டப் பிரிவு மூலம் கடலோர காவல் படை தனி அமைப்பாக உருவாக்கப்பட்டது. கடல் வளங்களைப் பாதுகாப்பது, கடல் வழிக் குடியேற்றத்தைக் கண்காணிப்பது, கடல்வழி போதைப்பொருள்கள் இந்தியாவுக்குள் வராமல் தடுப்பது, கப்பல்களைப் பாதுகாப்பது போன்றவை இதன் பணியாகும். கடலோரக் காவல்படையானது இந்தியக் கடற்படை, மீன் வளத்துறை, வருவாய் மற்றும் குடியேற்றத்துறை, காவல்துறை போன்றவற்றுடன் ஒத்துழைத்து தன் பணியைச் சிறப்பாக செய்து வருகிறது. 

ஆளுநர்

இந்திய கடல் எல்லையில், 13 சதவிகிதம் தமிழகத்தில் உள்ளது. இந்திய கடலோரக் காவல் படையில், 139 கப்பல்களும், 62 விமானங்களும் உள்ளன. 2023க்குள் இது 200 கப்பல்களாவும், 100 விமானங்களும் உள்ளனவாக மாறிவிடும். கடலோரக் காவல்படை துவங்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை, 9000 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.  கடலோர காவல்படையின் கண்களாகவும் காதுகளாகவும் மீனவர்களே இருக்கிறார்கள். கடல் பகுதியில், தென்படும் புதிய நடமாட்டங்கள், அந்நிய கப்பல்களின் வருகைகளை மீனவர்கள் உடனடியாக பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்கிற உணர்வை அவர்களுக்குத் தர வேண்டும்.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close