விருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்! | vigilance raid in social welfare office and labour office in virudhunagar

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (23/02/2019)

கடைசி தொடர்பு:10:41 (23/02/2019)

விருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்!

விருதுநகர் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ராஜபாளையம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.76,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்திருந்த பயனாளிகள் 275 பேருக்கு இன்னும் தங்கம் வழங்கப்படவில்லை. சமூக நலத்துறை அதிகாரிகள் பயனாளிகளிடம் பணம் கேட்பதாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் மாவட்ட துணை ஆய்வுக்குழு தாசில்தார் ராமநாதன் தலைமையில் 8 லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொண்ட குழுவினர் சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர்.

சோதனை

சமூக நலத்துறை அலுவலர் ராஜம் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அலுவலக இளநிலை உதவியாளர் மற்றும் வட்டார விரிவாக்க அலுவலர்கள் 4 பேரிடம் கணக்கில் வராத பணம் மொத்தம் ரூ.29,070 இருந்தது தெரியவந்தது. எனவே, லஞ்ச ஒழிப்பு போலீஸார் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

சோதனை

அதேபோல ராஜபாளையம் தொழிலாளர் நலத்துறை அலுவலர் மாரிமுத்து என்பவர் கடைகளில் ஆய்வுக்குச் சென்று கடை உரிமையாளர்களிடம் முறைகேடாகப் பணம் வசூல் செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.47,000 இருந்தது தெரியவந்தது. எனவே, அந்தப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.


[X] Close

[X] Close