விபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி! - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம் | Villupuram mp rajendran killed in road accident

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (23/02/2019)

கடைசி தொடர்பு:10:59 (23/02/2019)

விபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி! - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்

விழுப்புரம் அ.தி.மு.க எம்.பி ராஜேந்திரன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி உறுதியானதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் தைலாபுரம் தோட்டத்தில் விருந்து வைத்தார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

ராஜேந்திரன்

நேற்று இரவு நடைபெற்ற இந்த விருந்தில் அமைச்சர்கள் சி.வி சண்முகம், எம்.சி சம்பத், வேலுமணி, தங்கமணி, எம்.பி-க்கள் ராஜேந்திரன், ஏழுமலை உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். திண்டிவனத்தில் முதல்வரை வரவேற்ற எம்.பி ராஜேந்திரன் அவர்களுடன் தைலாபுரம் விருந்தில் கலந்துகொண்டார். பின்னர் விருந்து முடிந்ததும் முதல்வரை வழியனுப்பிய எம்.பி ராஜேந்திரன் திண்டிவனத்தையடுத்த ஜக்கம்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

ராஜேந்திரன்

இன்று காலை சுமார் 6.15 மணியளவில் தனது காரில் திண்டிவனத்தை நோக்கிப் புறப்பட்டார். அஜீத் என்பவர் காரை ஒட்டிக் கொண்டிருக்க முன்புற சீட்டில் எம்.பி ராஜேந்திரனும், பின்புறம் அவரது உதவியாளர் அமர்ந்திருந்திருந்தனர். திண்டிவனம் மேம்பாலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலை தடுமாறிய கார் சாலை நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் எம்.பி ராஜேந்திரன் உள்ளிட்ட மூவரும் காயமடைந்தனர்.

எம்.பிக்கு தலையில் பலமாக அடிபட்டு காதுகளின் வழியே ரத்தம் வெளியேறியது. தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அவர்கள் மூவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் எம்.பி ராஜேந்திரன் உயிரிழந்த நிலையில், மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அங்கே சென்ற அமைச்சர் சி.வி சண்முகம் ராஜேந்திரனின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

கிளியனூரை அடுத்த ஆதனப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரனுக்கு வயது 62. இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மகன் பொறியியல் படித்து வரும் நிலையில் இரண்டு மகள்களும் விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவரது மனைவி சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த அனைத்து பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளையும் தள்ளிவைக்கும்படி அமைச்சர் சி.வி சண்முகம் அந்தந்த தொகுதி எம் எல் ஏ மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.


[X] Close

[X] Close